ஒரு கோடி டிஜிட்டல் வேலை: மத்திய அமைச்சர் தகவல்!

‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ மாநாடு டெல்லியில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவில் 5ஜி சேவையையும் தொடங்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா உச்சி மாநாடும் நடைபெற்றது.

மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொடர்பு இணையமைச்சர் தேவுசிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், புதுச்சேரி, ஆந்திரா, அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தராக்கண்ட், தெலங்கானா, தமிழ்நாடு, மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்கள் மற்றும் 1.3 பில்லியன் மக்களின் லட்சியங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அடங்கிய டிஜிட்டல் இந்தியா குழு பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் 2026-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதோடு, ஒரு கோடி டிஜிட்டல் சார்ந்த வேலைகளை ஏற்படுத்தித் தருவதிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், டிஜிட்டல் இணைப்புகளை வழங்குவதற்கான அனுமதி பெறும் காலம் 3 மாதங்களில் இருந்து 6 நாட்களாகக் குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தேவுசிங் சவுகான் தமது உரையின்போது குறிப்பிட்டார். அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசுகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அபரிமிதமாக இருப்பதோடு, மின்னணு துறையில் விநியோக சங்கிலியின் நம்பகமான கூட்டாளியாக இந்தியாவை உலக நாடுகள் நோக்குவதாகவும் தெரிவித்தார்.

நிறுவனங்களை ஈர்க்கவும், 2 மற்றும் 3ஆம் தர நகரங்களில் புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்குவதற்கு ஏதுவாகவும் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டங்களை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.