திருச்சி மலைக்கோட்டையில் ஹீலியம் சிலிண்டர் வெடிப்பு – ஒருவர் பலி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பண்டிகை காலங்களில் திருச்சியை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் துணிகள், நகைகள் வாங்குவதற்கு அதிகளவு கூடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருட தீபாவளியை முன்னிட்டும் மக்கள் அப்பகுதியில் அதிகளவு நேற்று கூடி தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் தனியார் ஜவுளிக்கடைக்கு முன் இருசக்கர வாகனத்தில் ஹீலியம் சிலிண்டரை ஏற்றிவந்த இருவர் பலூன் வியாபாரம் செய்யத்தொடங்கினார்கள். பலூனை ஊதுவதற்காக ஹீலியம் சிலிண்டரை பயன்படுத்தவும் செய்தனர்.

 

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சரியாக இரவு 8.10 மணிக்கு ஹீலியம் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில், சாலையில் நடந்து சென்ற ஒருவர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயங்களோடு உயிர் தப்பினார்கள். உயிர் சேதமின்றி பொருள் சேதமும் நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி புதிய ஆட்டோ மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. ஆட்டோவை நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்றதால் திருச்சி வரகனேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மன்சூர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். 

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவரமாக விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தை அடுத்த கரட்டான் காடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 22லிருந்து 35க்குள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையே பலூன் விற்றவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் காவல் துறையின் மிகத்தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதன் சிசிடிவி காட்சி வெளியாகி பதற செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.