புழுன்னா என்ன… பூச்சின்னா என்ன? அஞ்சிய குழந்தைகளுக்கு ஆர்வம் தூண்டிய முகாம்!

தட்டாண்களையும், பட்டாம் பூச்சிகளையும் ஓடி ஓடி பிடித்து விளையாடிய காலம், ரயிலு பூச்சி, பொன்வண்டுகளை பார்த்து ரசித்த காலம் 90ஸ் கிட்ஸூடன் முடித்துவிட்டது போல… ஓடி ஆடி விளையாட வேண்டிய இன்றைய குழந்தைகள் எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றன.

தாய்மார்கள் நிலா காட்டி சோறு ஊட்டிய காலம் போய் தற்போது செல்போனில் வீடியோ காட்டி சோறு ஊட்டும் காலத்தில் உள்ளோம். இதனால் என்னவோ நம்மை சுற்றி என்ன இருக்கிறது என்பதைக் கூட குழந்தைகள் கவனிக்காமலும், தெரிந்துகொள்ளாமலும் உள்ளனர். குறிப்பாக  பூச்சிகள் குறித்த புரிதல் இல்லாத, வண்ணங்களால் வசீகரிக்கும் பட்டாம் பூச்சிகளை கூட தொடுவதற்கு அஞ்சும் தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது. 

பூச்சிகள் குறித்த விளக்கமளிக்கும் செல்வம்

இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தேனியைச் சேர்ந்த மருத்துவர் ப்ரீத்தா நிலா, கற்றல் இனிது அமைப்பின் வாயிலாக பூச்சிகளை தெரிந்துகொள்வோம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான ஒரு நாள் முகாமினை நடத்தினார். இதில் திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண் உதவி இயக்குநரும், உதவி பேராசிரியருமான செல்வம் குழந்தைகளுக்கு பூச்சிகள் குறித்து எளிமையாக விளக்கினார். 

முன்னதாக அவரே, அருகே வயல்வெளி பகுதிக்கு சென்று பலவகையான தட்டாண், பட்டாம்பூச்சி, வண்டு, வெட்டுக்கிளி, அந்துப்பூச்சி, புழு ஆகியவற்றை சேகரித்து வந்திருந்தார். அந்தப் பூச்சிகளை பார்த்த பல குழந்தைகள் ஆச்சரியதத்தில் அருகே வர, சில  குழந்தைகள் அருகே சென்று பார்க்கவே அஞ்சினர். 

பூச்சிகளை கையில் வைத்து பார்க்கும் சிறுவர்கள்

அவர்களிடம் பூச்சி செல்வம், பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகளும் தீமை செய்யும் பூச்சிகளும் உள்ளன. இரண்டு றெக்கைகள் இருந்தால் ஈ, 4  றெக்கைகள் இருந்தால் பூச்சி. பூச்சிகள் முதலில் இலைகளில் 3 முதல் 5 நாள்களில் முட்டை வைக்கும், அது 15 முதல் 25 நாள்கள் புழுவாக மாறி மண்ணில் விழுந்து தன்னைச்சுற்றி கூடுகட்டி கூட்டுப்புழுவாக மாறும். பெரும்பாலான புழுக்கள் மண்ணில் 7 முதல் 8 நாள்கள் கூடிகட்டிக் கொள்ளும். பூச்சிகளின் வெளித்தோற்றத்தை வைத்து தான் ஆண் பூச்சியா, பெண் பூச்சியா எனப் பார்க்க முடியும். கூட்டுப்புழுவில் இருந்து வெளிவருவது தான் தாய்பூச்சி. இந்தப் பூச்சி 10 நாள்கள் உயிருடன் இருக்கும். இவ்வாறு பூச்சிகள் 4 வாழ்க்கை முறைகளை கொண்டிருக்கிறது. ஒரு பூச்சியின் ஆயுட்காலம் 45 முதல் 60 நாள்கள் இருக்கும். 

பூச்சி மனிதனை விட 5 விஷயங்களில் பெரியவை. மனிதன் உருவத்தில், அறிவில் பூச்சிகளை விட பெரியவனாக இருக்கலாம். ஆனால் சாப்பிடும் அளவு அதிகம், 4 அவதாரம் எடுக்கிறது, ஒரு முறை 40 முதல் 400 முட்டை இடுவதால் இனப்பெருக்கம் அதிகம்,  ஒராண்டில் 6 தலைமுறைகள் எடுப்பதால் வாழ்க்கை காலம் அதிகம், பூச்சியின் அளவு சிறியதாக இருப்பதால் அழிப்பது கடினம்.  

ஆர்வாக கவனிக்கும் குழந்தைகள்

புழுக்கள் ஒரு தாவரத்தின் நுனி இலை முதல் அடி வரை வேர் வரை சாப்பிடும். புழுக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே கழிவை வெளியேற்றிக் கொண்டே இருக்கும். புழு சாப்பிடும் அளவு உடல் அளவைவிட ஒவ்வொரு நாளும் 50 மடங்கு சாப்பிடும் 48 மடங்கு கழிவை வெளியேற்றும். புழு, கம்பளி பூச்சி, காவடி புழு, லூப்பர், க்ரப் போன்ற புழு வகைகள் உள்ளன. புழு வண்ணத்துப்பூச்சியாக, கம்பளி அந்துப் பூச்சியாக, வண்டு, ஈயாக மாறுகிறது. 

தலை, நெஞ்சு, வயிறு பகுதிகளையும், நெஞ்சுப் பகுதியில் 6 கால்களையும், நெஞ்சில் 4 இறகுகளையும், வாய்ப் பகுதியில் 2 கொம்புகளும் கொண்டிருந்தால் பூச்சி எனப்படும். இதில் கால்களை தவிர வேறொன்று விடுபட்டாலும் பூச்சியாக கருதப்படும். 

பூச்சி வளரும் விதம்

மேலும் பூச்சிகளின் வாய்ப்பகுதி, கால் பகுதி, றெக்கை பகுதி குறித்தும், கொசுகள், தேனீக்கள், எறும்புகள் எவ்வாறு உணவு தேடி கொள்கின்றன. கொசு மயக்க மருந்து கொடுத்து எவ்வாறு மனித ரத்தத்தை உறிஞ்சுகிறது, எப்படி முட்டையிட்டு, புழுவாகி வெளியேறுகிறது என்பதையெல்லாம் சுவாரசியமாக விளக்கினார்.

கடைசியாக மனிதனும் பூச்சிகளும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். விவசாயிகள் பூச்சிகளை பகையாளியாக பார்க்கிறார். ஆனால் அவை தான் பங்காளி. பயிர்களை முதலில் சாப்பிடுவது பூச்சிகள் தான் பிறகு தான் மனிதன் சாப்பிடுகிறான். எனவே பயிர்களை சாப்பிடாமல் இருக்க பூச்சிக்கு விஷம் வைப்பதாக நினைத்து நமக்கு நாமே விஷம் வைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் பூச்சிகளால் மனிதன் அதிக நன்மை அடைகிறான் என்றார். 

இதையடுத்து குழந்தைகள் பூச்சிகள் குறித்து எந்த அளவுக்கு புரிந்து கொண்டார்கள் என்பதையும் தனது கேள்விகளும் மூலம் அறிந்த பூச்சி செல்வம் தான் சேகரித்துவந்த பூச்சிகள் அனைத்தையும் குழந்தைகளிடம் காட்டினார். இப்போது அனைத்து குழந்தையும் எவ்வித அச்சமும் இன்றி பூச்சிகளை பார்த்தனர். பட்டாம் பூச்சிகளையும், தட்டாண்களையும் முதல்முறையாக ஆசையாக தொட்டுப்பார்த்தனர். 

குழந்தைகள்

குழந்தைகளை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள், பூச்சிகள் குறித்த போதிய புரிதலின்றியே நாங்களும் இருந்தோம். பூச்சி என்றாலே அடித்து கொள்ளும் மனநிலையில் இருந்த எங்களுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது என்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.