பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை

லக்னோ: தனது துல்லியமான வியூகத்தால் இந்திய அரசியலில் தனி இடத்தைப்  பிடித்துள்ள பிரசாந்த் கிஷோர், தற்போது வெளிப்படையாகவே தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அதை அவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து தொடங்கியுள்ளார். பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன் சூரஜ் பாதயாத்திரையைத் தொடங்கினார். காந்தி ஜெயந்தி அன்று மேற்கு சம்பாரானில் உள்ள பிதிஹார்வாவில் இருந்து தனது யாத்திரையைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோரின் இந்த பயணமும் ஒரு அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. 

பீகார் அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கும் பிரசாந்த் கிஷோரை, மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். நேற்று, (அக்டோபர் 3 செவ்வாய்) பீகாரின் செய்தித்தாள்களில் பிரசாந்த் கிஷோர் கொடுத்த முதல் பக்க விளம்பரம் தொடர்பாக குறிப்பிட்ட நிதீஷ் குமார், அரசியல் கட்சிகள் கூட இதுபோன்ற விளம்பரங்களை கொடுக்க முடியாது என்று சந்தேகத்தை எழுப்புகிறார். 

அமலாக்க இயக்குநரகம், சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினருக்கு இந்த விளம்பரம் பற்றிய அலட்சியப் போக்கு ஆச்சரியமாக இருப்பதாக கூறும் பீகார் முதலமைச்சர், பீகாரில் எதிர்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியுடன் மறைமுகமான புரிதல் தொடர்பாக அதிர்ச்சி எழுப்புகிறார். 

பிரசாந்த் கிஷோர் தனது 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரையை, மேற்கு சம்பாரானில் இருந்து தொடங்கிய பிறகு, பீகாரில் 1990 முதல் எந்த வளர்ச்சியும் இல்லை என்று கூறினார்.

வளர்ச்சியைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோரின் நற்சான்றிதழ் மாநிலத்திற்குத் தேவையில்லை என்றும், நிதீஷ் குமாரின் தலைமையில் பீகார் வேகமாக முன்னேறி வருவதாகவும் ஜேடியு தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார். கிஷோரின் ஜன் சூரஜ் யாத்திரை பற்றிக் குறிப்பிடும் ராஜீவ் ரஞ்சன் சிங், அவர் பாஜக சார்பாக வேலை செய்வதாகத் தோன்றுகிறது என்றார்.

“அவர் கொடுக்கும் விளம்பரம் சந்தேகத்தை எழுப்புகிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகள் கூட முழுப்பக்க விளம்பரம் போடுவதை எப்போது பார்க்கிறோம்? நேற்று பாத யாத்திரைக்காக இப்படி முதல் பக்க விளம்பரங்களைக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி அளிக்கிறார். வருமான வரித் துறை, சி.பி.ஐ,  அமலாக்க இயக்குநரகம் என மத்திய அரசு முகமைகள் இந்த செய்தித்தாள் விளம்பரங்களை கவனிக்கவில்லையா? 
இது வரை இந்த அமைப்புகள் பாராமுகமாக இருப்பதன் காரணம் மத்திய அரசை ஆள்பவர்களின் ஆதரவும் ஆசியும் பிரசாந்த் கிஷோருக்கும் இருக்கிறது என்பதுதான் சாத்தியமான விளக்கம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் புகழ்பெற்ற அரசியல் மூலோபாயவாதியான கிஷோர், பிஜேபி, காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் என, பல அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பின்னர் அவர் ஜேடியுவுடன் இணைந்து பணியாற்றினார். ஆனால் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட பகிரங்கமாக மோதலுக்குப் பிறகு விலகினார்.

தீவிர அரசியலில் சேருவேன் என்று பிரசாந்த் பூஷண் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. “கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும் என்று பீகார் அரசு சொல்வதை 30-40 ஆண்டுகளாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் மாநிலத்தில் எதுவும் மாறவில்லை. 1990 ஆண்டில் இருந்ததைப் போலவே இன்னமும் பீகார் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்குள்ள மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்று பிரசாந்த் கிஷோர் கொளுத்திப் போட்ட வார்த்தை சரவெடிகள், பீகாரில் எதிரொலிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.