புதிய தேசிய கட்சியை நாளை அறிவிக்கிறார் தெலங்கானா முதல்வர்!

தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும், வருகிற 9ஆம் தேதி டெல்லியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. புதிய மாநிலமான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். தெலங்கானா மாநிலம் உருவாக்கதுக்கு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த அவரே தற்போதும் முதல்வராக பதவியில் நீடித்து வருகிறார். தெலங்கானா மாநில முதல்வராக எட்டு ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அவர், முதல் ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். முதல் ஆட்சி காலத்தின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து மீண்டும் வெற்றி பெற்றார்.

அப்போது பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், வெற்றி பெற்றதும் அமைதியாகி விட்டார். ஆனால், அண்மைக்காலமாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேசிய அரசியலில் நுழைவதற்கு அவர் காட்டி வரும் ஆர்வமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியிலும் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்து தொடர் ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, தேசிய அரசியலில் நுழைவது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதம் முதலே ஆலோசனையில் ஈடுபட்டு வரும் சந்திரசேகர் ராவ், தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றவும் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது தேசிய கட்சியின் பெயரை தசரா பண்டிகையையொட்டி நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி (நாளை) கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கேசிஆர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர் தேசிய அரசியலில் நுழைவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனவும், அதனைத்தொடர்ந்து கட்சியின் பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று கட்சியின் பெயரை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுவர் எனவும் கூறப்படுகிறது.

அப்படி பெயரை மாற்றும் பட்சத்தில் பாரத் ராஷ்டிர சமிதி என்ற பெயர் வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், முன்னதாக, கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

டிஆர்எஸ் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், ஆட்சியின் அனைத்து அம்சங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்து விட்டது. இதனால், நாட்டு மக்கள் வலுவான தேசிய தளத்தை எதிர்பார்க்கிறார்கள். குஜராத் மாடல் முற்றிலும் தோல்வியடைந்து, வலுவான மாற்றை நாடு தேடிக்கொண்டிருப்பதால் தேசிய மட்டத்திற்கு செல்வது குறித்து கேசிஆர் பேசியதாக தெரிவித்துள்ளார். தேசிய கட்சியின் பெயரை முதல்வர் கேசிஆர் அறிவிப்பார்; பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.