நாங்கள் அனைத்துத் துறைகளிலும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – ரோகித் சர்மா

இந்தூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த 2-வது பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இறுதியில் இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்த தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

முடிவு என்னவாக இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம். நாங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்களது பந்துவீச்சில் கவனம் கொடுக்க வேண்டும். பவர்பிளேவில் என்ன செய்ய வேண்டும் மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் இரு சிறந்த அணிகளுடன் விளையாடியுள்ளோம்.

இருப்பினும், நாங்கள் இன்னும் எப்படி எங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இது ஒரு சவாலான காரியம். ஆனால், நாங்கள் அதற்கான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆஸ்திரேலியாவிற்கு நாங்கள் விரைவாக செல்ல உள்ளோம்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலருக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் புதிது. அவர்கள் ஆடுகளத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகக் கோப்பை லீக் ஆட்டங்களுக்கு முன்னதாக நாங்கள் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளோம் என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.