விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு | விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் பெற முதல்வர் அலுவலகத்துக்கு இன்னும் சமர்ப்பிக்கவில்லை: ஆர்டிஐ அதிர்ச்சி

சென்னை: விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்காக, விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறைக்கு அனுப்பி 10 மாதமாகும் நிலையில், இதுவரை தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு ஒப்புதல் பெற சமர்ப்பிக்கவில்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது. எனவே, தமிழக முதல்வருக்கு விரைவாக அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டம், முதல் கட்டம் நீட்டிப்பு திட்டம் நிறைவடைந்து, பரங்கி மலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பிட்டில், 118.9.கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவில் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,528 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்கள் உயர்மட்டபாதையில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாக தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து எந்தவித ஒப்புதலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன், விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அதில், விமானநிலையம்-கிளாம்பாக்கம் திட்டப்பணி குறித்து ஆர்டிஐ-யில் பதில் கிடைத்துள்ளது. விமானநிலையம்-கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்புமுயற்சிகள் துறை கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பெற்றது. இந்த அறிக்கையை, தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கவில்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.

இது குறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது: இது, தாம்பரம் பகுதி வாழ் மக்களுக்கு ஒரு மிகுந்த வேதனை அளிக்கிறது. விமான நிலையம் – தாம்பரம் – கிளாம் பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் வெறும் வடிவமைத்தல் நிலையிலேயே உள்ளது. இத்திட்டத்தின் தற்போதைய திட்ட நிலை குறித்த கேள்விக்கு முக்கிய குறிக்கீடாக இருப்பது விமான நிலையம் முதல் பெருங்களத்தூர் வரை அமைக்கப்படவுள்ள உயர்மட்ட சாலை திட்டம் என்றும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையுடன் ஆலோசனை நடந்து வருகிறது என்றும் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்ட ஒப்புதலுக்காக, மத்திய அரசின் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம், செலவு துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், இத்திட்டம் நிதி ஒப்புதலுக்காக மாநில நிதி அமைச்சகத்துக்கு இன்னும் அனுப்பப்பட
வில்லை என்ற பதிலும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட இருக்கும் நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் வடிவமைப்பு நிலையிலேயே உள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தத் திட்டப்பணிகள் தொடங்குவதில் மேலும் கால தாமதம் ஏற்படும் நிலையே உள்ளது. எனவே, இதன் விரிவான திட்ட அறிக்கையை தமிழக முதல்வர் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் ஒப்புதல் கிடைக்கும்: இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: விமானநிலையம் – கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். தற்போது, இந்தத்திட்டத்தில் சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஜிஎஸ்டி சாலைகளில் முக்கியமான சந்திப்புகளில் நெடுஞ்சாலை துறையின் மேம்பாலங்கள் அமைக்க விரிவானதிட்ட அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்புகள் மற்றும் மதிப்பீடுகளின் திருத்தம் ஆலோசகரால் முடிக்கப்பட்டது. தற்போது, ஒப்புதல் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.