அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு செப்டம்பட் 29-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களையும் மனுதாரராகச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சம்மன், தடை, அனுமதி என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அமலாக்கத்துறைக்கும் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்…
செந்தில் பாலாஜி மீதான வழக்கு விவரம்
2011-16 காலகட்டத்திலான அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது, அரசு போக்குவரத்துத்துறையில் நடத்துனர், ஓட்டுநர் போன்ற வேலைகளை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தாக செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் 2018-ம் ஆண்டில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அடுத்த நாளே செந்தில் பாலாஜி, அசோக்குமார், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர்மீது 409, 406, 420, 520 (1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். இதில் அருள்மணி, முத்தையா, முருகேசன், வேணுகோபால், குமார், சரவணன், வேலாயுதம், அம்பேத்கர், முத்தரசு, ஜெயகுமார், விஜயகாந்த், முருகன், சதிஷ், ஐயப்பன் ஆகிய 14 பேர் பாதிக்கப்பட்டவர்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கு தொடர்ந்தவரும், மூன்றாவது குற்றவாளியான சண்முகமும் தங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகச் சொன்னதை அடுத்து 2021-ம் ஆண்டில் அந்த வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை விசாரணை!
செந்தில் பாலாஜி மீதான இந்த மோசடி வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்ட புகாரின் அடிப்படையில் 2021-ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. மேலும், வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜி, அசோக், சண்முகம் உள்ளிட்டோருக்கு 2022, ஏப்ரல் 29-ம் தேதி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. எஃப்.ஐ.ஆர் பதிவுகளில் செந்தில் பாலாஜியின் பெயர் முதலில் இடம்பெறவில்லை. இருப்பினும், அப்போதே சம்மன் வரத் தொடங்கின. துணை குற்றப்பத்திரிகையில்தான் மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அதில் முதல் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூலை 29, 2021 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டபோது, செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்துக்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறையினரிடம் இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
”விசாரணை நேர்மையாக நடக்காது!”
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறது. செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் ஏன் இந்த அக்கறை என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். “அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது காவல்துறை விசாரணையிலேயே தெளிவாகியிருக்கிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சர் எனும்போது மாநிலத்தின் காவல்துறை விசாரணை எப்படிச் சுதந்திரமாக நடக்கும் என்பதை நம்ப முடியும்… ஏற்கெனவே, லஞ்ச வழக்கை வெறும் ஏமாற்று வழக்காக மட்டுமே பதிவுசெய்திருக்கும் காவல்துறை மீண்டும் விசாரணை செய்தால் எப்படி முழு உண்மையும் வெளியில் வரும் என்ற சந்தேகம் இருக்கிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ததையும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கும்பட்சத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா, இல்லையா என விசாரணை செய்ய அமலாக்கத்துறை இருக்கிறது.

வழக்கு விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்குமேல் ஆகியும், தமிழ்நாடு அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இதில் அமலாக்கத்துறை தலையிட்டால் மட்டுமே நேர்மையான விசாரணை நடக்கும். உண்மை வெளியில் வரும்” என்றார்.
“எங்களுக்கு வழக்கு விவரங்களே தரப்படவில்லை!”
இது குறித்து செந்தில் பாலாஜி தரப்பில் விசாரித்தோம். “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அதைத் தொடக்கம் முதலே விரிவாகச் சொல்லிவருகிறோம். வழக்கு தொடுத்தவரும், மூன்றாவது குற்றவாளியுமான சண்முகமும் சமரசம் செய்துகொண்டதாகத்தான் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. அதையடுத்தே வழக்கை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. ஆனால், அமைச்சர் சமரசமாகச் சென்றார் எனத் திரித்துச் சொல்லப்பட்டது. உண்மையில், அமைச்சர் சமரசமாகச் சென்றார் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அப்படி எங்கும் பதிவுசெய்யவும்படவில்லை. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது 2015-ல் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய செந்தில் பாலாஜிமீது மூன்று ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதிலிருந்தே தெரிகிறது.
அமைச்சர் பணம் வாங்கியதாகவோ, பரிந்துரைக் கடிதத்தில் கையெழுத்திட்டதாகவோ, யாருக்கும் வேலை வாங்கித் தருகிறேன் என உறுதி அளித்ததாகவோ புகாரிலும் விசாரணையிலும் சொல்லப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் மீண்டும் விசாரணை, அதுவும் தமிழ்நாடு காவல்துறை மூலம் நடக்கவிருக்கிறது. மற்றபடி இதில் சர்ச்சையாக எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை. தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுங்கள் என்றுதான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து கேட்டுவருகிறார். ஆனால், இதுவரை அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாடு காவல்துறை நடத்தும் விசாரணையிலும் அதையேதான் கேட்கத் திட்டமிட்டிருக்கிறார்” என்றனர் விரிவாக

விசாரணை முறையாக நடந்தால் அது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தி.மு.க அரசுக்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் சிலர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதில்தான் இருக்கிறது சஸ்பென்ஸ்!