இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக கடந்த சில நாள்களாகவே அறிவிக்கப்பட்டன. இந்த வரிசையில் கடைசியாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசானது கடந்த திங்கள் அன்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க ஃபெட் அமைப்பின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கிக்கும் மற்ற இரு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யு டைமண்டுக்கும் மற்றும் பிலிப் ஹெச் டிப்விக்-கும் இந்த ஆண்டுகான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி அறிவித்தது.
‘வங்கிகள் திவால் ஆகாமல் தடுக்க வேண்டியதன் அவசியம்’ பற்றி இந்த மூவரும் செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாகவும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்கப் பொருளாதார நிபுணரும் அமெரிக்க ஃபெட் அமைப்பின் முன்னாள் தலைவருமான பென் பெர்னான்கிக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு இருப்பது பற்றி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார் ‘ஜோஹோ’ நிறுவனத்தின் சி.இ.ஒ.வான ஶ்ரீதர் வேம்பு.
Ben Bernanke wins the economic Nobel Prize at the very moment when the global financial system is (once again) on the edge due to the misguided monetary policies he and other central bankers spearheaded.
This is a bankruptcy moment for central banking and the economics Nobel. https://t.co/lfKDV8NZyv
— Sridhar Vembu (@svembu) October 10, 2022
‘‘உலக நிதி நிர்வாகம் மீண்டுமொரு முறை சீர்குலையும் நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் பென் பெர்னான்கிக்கு நோபல் பரிசு தரப்பட்டுள்ளது.
இந்த சீர்குலைவுக்குக் காரணம், பென் பெர்னான்கியும் வேறு சிலரும் காட்டிய தவறான வழிகாட்டுதல்கள்தான். மத்திய வங்கிகளும் நோபல் பரிசும் திவாலாகும் தருணம் இது’’ என்று ‘ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு சற்று கடுமையாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.
உலக நிதி நிர்வாகத்தில் பெரிய பிரச்னை வரக்கூடாது. அதற்காக அவர்கள் ஆற்றிய பணிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு தரப்பட்டிருக்கிறது என நோபல் கமிட்டி சொன்ன நிலையில், ஶ்ரீதர் வேம்புவின் கருத்து முற்றிலும் மாறானதாக இருப்பதால், ஶ்ரீதரின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்பார்ப்பாகவும் பல விதமான கருத்துகள் எழுந்துள்ளன.