ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 99 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, அந்நாட்டில் அனைத்து வகையான இருமல் மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குழந்தைகள் இறப்புக்கு மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இருமல் மருந்தால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருமல் மருந்துகள் மீதான தடை குறித்து இந்தோனேசிய அரசு தரப்பில், “இருமல் மருந்து காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டதால் நடப்பு ஆண்டு மட்டும் 99 குழந்தைகள் உயிரிழந்தன. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 வயதுக்குட்டப்பட்டவர்கள். இந்த இருமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் இறப்பு காரணமாக இருமல் மருந்துகள் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பை ஏற்படுத்திய இருமல் மருந்துகளின் பெயர்களை இந்தோனேசிய அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கையானது, அரசு வெளியிட்டதைவிட கூடுதலாக இருக்கும் என்றும் இந்தோனேசிய சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.