சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சித் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இதில் சசி தரூர் தோல்வி அடைந்தார். வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டபோது, உ.பி.யிலிருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் முறையாக சீல் வைக்கப்படாதது குறித்து சசி தரூரின் தேர்தல் முகவர் சல்மான் சோஸ் புகார் கூறி இருந்தார்.
பின்னர் இந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டது. ஆனாலும் சசி தரூர் ஆதரவாளர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் முறைகேடு நடந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி நேற்று சசி தரூருக்கு எழுதிய கடிதத்தில், “தேர்தல் குறித்து நீங்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் நீங்கள் திருப்தி அடைந்தீர்கள். ஆனால், கட்சியின் மத்திய தேர்தல் அதிகாரி தங்களுக்கு எதிராக சதி செய்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளீர்கள்.
எங்களிடம் ஒரு முகத்தையும் ஊடகங்களிடம் மற்றொரு முகத்தையும் காட்டி உள்ளீர்கள். உங்கள் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது” என கூறியுள்ளார்.