புதுக்கோட்டை: “ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை, ஒருதலைபட்சமானது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகள் என்பதை நான் ஆணித்தரமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுகோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு தெய்வம்; எங்களுடைய கடவுள். ஆகையால், ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஒருதலைபட்சமானது.
இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகள் என்பதை நான் ஆணித்தரமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை ஜெயலலிதாவை இழந்து இருக்கக்கூடிய, தவிக்கக்கூடிய இந்த நேரத்தில் வெந்தப் புண்ணிலே வேல் பாய்ச்சியது போன்றதாக ஆணையத்தின் கருத்துகள் இருக்கின்றன. இருந்தாலும், பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள் இதை சட்ட வல்லுநர்களோடு கலந்து சட்டப்படி நேர்மையோடு முறையாக நெஞ்சுரத்தோடும் நெஞ்சத்தில் தூய்மையோடும் இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.