ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது: குடியரசு துணைத்தலைவர் பேச்சு!

தேசத்திலிருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்ப்பதன் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்ம குமாரிகளின் உலகத் தலைமையகத்தில் “வலுவான, வளமான, பொன்னான இந்தியாவை நோக்கி” என்ற மையப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்ம குமாரிகளின் 85-வது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், ஆன்மிகம் இல்லாமல் வாழ்க்கை நிறைவடையாது. ஆன்மிகத்தை கடைபிடிக்காவிட்டால் உலகம் முழுவதும் தற்போது நடைமுறையாகிவிட்ட தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி என்றும் இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுமையும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பரப்பி வரும் பிரம்ம குமாரிகளை அவர் பாராட்டினார்.

புதிய கல்விக் கொள்கையை புகழ்ந்துரைத்த அவர், சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும் என்றும் அவர் கூறினார். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டதற்காக பிரம்ம குமாரிகளை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்த அமைப்பு ஈடுஇணையற்றது என்றும் மனித குலத்திற்கு மட்டுமின்றி, இந்த புவிக்கோளத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.