தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சார்ந்த ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு இடிந்தகரை பகுதிகளில் நேற்று முன் தினம் பாறையில் மோதி கடலில் மூழ்கிய நிலையில் படகின் பாகங்கள் இடிந்தகரை அருகே கடற்கரையோரத்தில் கரை ஒதுங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து என்பவருக்கு சொந்தமான இழுவை வலை விசைப்படகு கடந்த 1-ம் தேதி மீன் பிடிக்க சென்றது. இந்த படகு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் மீன் பிடித்து விட்டு கடந்த 24-ம் தேதி அன்று அவர்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது இடிந்தகரையில் உள்ள பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து ஏற்பட்டவுடன் படகின் என்ஜின் பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால், படகு கடலில் மூழ்க ஆரம்பித்தது. இதையறிந்த இடிந்தகரை மீனவர்கள் படகில் உள்ள 11 பேரையும் மீட்டனர். படகில் இருந்த சுமார் 12 லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் படகினையும், அதில் இருந்த பொருட்களையும் மீட்க முடியாமல் கடலில் மூழ்கியது. இந்நிலையில், இன்று அதிகாலை இடிந்தகரை அருகே உடைந்த விசைப்படகின் பாகங்கள் கரை ஒதுக்கியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமாக பார்க்கின்றனர். இந்த விசை படகின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த முடியாது என்று விசைப்படகின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.