'இப்போ தான் நிம்மதியா இருக்கு…' தலைவர் பொறுப்பை ஒப்படைத்த சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெர்றார். இதையடுத்து, தலைவர் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

ஏறத்தாழ 23 ஆண்டுகாலம் தலைவராக செயல்பட்ட சோனியா காந்தி இன்று அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே தலைவராக பொறுப்பு எடுத்துக்கொண்டார். 

இந்நிகழ்வில் சோனியா காந்தி பேசியதாவது,”என்னால் முடிந்த அளவு சிறந்த வகையில் எனது கடமையை செய்துள்ளேன். இன்று எனது பொறுப்பில் இருந்து விடுபட்டுள்ளேன். எனது தோள்களில் இருந்த சுமை தற்போது இறங்கியுள்ளது. இப்போது சற்று நிம்மதியாக உணர்கிறேன். 

இந்த ஒரு பெரிய பொறுப்பு. அந்த பொறுப்பு இப்போது மல்லிகார்ஜுன கார்கேவிடம் சென்றுள்ளது. நாட்டில் தற்போது ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைதான் நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.  காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய சவால். முழு பலத்துடன், ஒற்றுமையாக முன்னேறி நாம் வெற்றியடைய வேண்டும்” என்றார். 

80 வயதான கார்கே, கடந்த அக். 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட சசி தரூரை வீழ்த்தி வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை அக். 19ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. காந்தி குடும்பத்தின் முழு ஆதரவு பெற்ற வேட்பாளராக கார்கே பார்க்கப்பட்டார். ஆனால், அதை அவர்கள் முற்றிலுமாக மறுத்தனர். 

Sonia Gandhi

25 ஆண்டுகளில் முதல்முறையாக காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. தொடர்ந்து, இன்றைய பொறுப்பு ஒப்படைக்கும் விழாவில் பேசிய கார்கே,”சோனியா காந்தி எப்போதும் உண்மையானவர். அவர் காட்டிய முன்னுதாரணம் இணையற்றது. அவரது தலைமையில், இரண்டு முறை காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சியமைக்கப்பட்டன. மேலும் அந்த ஆட்சிக்காலத்தில் போது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் (MGNREGA), உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டன” என தெரிவித்தார். 

ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.