
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலில் உள்ளது.
இதனை எதிர்த்து, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ் பி பார்திவாலா மற்றும் பேலா திரிவேதி ஆகியோரின் 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசு கொண்டுவந்த 103ஆவது சட்ட திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மையை மீறியுள்ளதா அல்லது அடிப்படை தன்மை மாறாமல் அதை ஒட்டியே நிறைவேற்றப்பட்டதா என்ற கோணத்தில் 1973ஆம் ஆண்டு கேசவாநந்த பாரதி வழக்கு தீர்ப்பை கருத்தில் கொண்டு விசாரித்தது.
அதேபோல், இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரத்தை அளவுகோளாக வைப்பது முறையா என மண்டல் வழக்கு தீர்ப்பளித்த இந்திரா ஷாவ்னே வழக்கையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தியது.
அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபல், சோலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி சட்டத்திருத்தம் முறையானது என வாதாடினார். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 பேர் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வழங்குகிறது.
newstm.in