கூடுதலாக 1 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!

ஏழை மக்களின் நலனை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் சுதாகர் ராவ் தலைமையில் 7-வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்காக, கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதன்பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கர்நாடகத்தில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு 7-வது ஊதிய குழு அமைக்கிறோம். அவர்களின் நலனை அரசு பார்த்துக் கொள்கிறது. ஊழியர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக பணியாற்ற வேண்டும்.

உங்களின் மற்ற பிரச்சினைகளை என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். ஊழியர்கள் நேர்மையாக, அர்ப்பணிப்பு, விசுவாசத்துடன் பணியாற்ற வேண்டும். ஏழை மக்களின் நலனை மனதில் கொண்டு நீங்கள் பணியாற்றினால் கர்நாடகம் முன்னேற்றம் அடையும். புதிய கர்நாடகத்தை உருவாக்கி அதன் மூலம் புதிய இந்தியாவை படைக்க நாம் அனைவரும் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்தியா ரூ.380 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் கர்நாடகம் ரூ.80 லட்சம் கோடி பொருளாதார பங்களிப்பு செய்ய வேண்டும். முந்தைய ஊதிய குழு அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஊதிய குழுவை அமைக்கிறோம். வேறு எந்த மாநிலமும் இவ்வளவு விரைவாக ஊதிய குழுவை அமைக்கவில்லை.

நேரமும், பணமும் முக்கியம். சரியான நேரத்தில் சரியான முறையில் பணத்தை சம்பாதிப்பது வாழ்க்கைக்கு உந்துசக்தியாக இருக்கும். அதன் அடிப்படையில் நாங்கள் 7-வது ஊதிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இந்த ஊதிய குழு பரிந்துரைகளை நாங்கள் அமல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.