கோயில் வாசலில் கொந்தளித்த பொன்.மாணிக்கவேல்..! – என்னதான் பிரச்னை?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலப்பட்டியில் கடந்த 2008-ல் ஆரோக்கியராஜ் என்பவர் விவசாய நிலத்தில் ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை மீட்ட போலீஸார் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இணைந்து சிலைகளை விற்றது தெரியவந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-ஆக இருந்த பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், திருவள்ளூரில் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, கோயம்பேடு காவல்நிலையத்தின் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காதர்  பாஷா கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பொன்.மாணிக்கவேல்

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம், சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், என் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்தார். இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சி.பி.ஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், சி.பி.ஐ விசாரணைக்கு தடை கோரியும் பொன்.மாணிக்கவேல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்தச்சூழலில், கடந்த 6-ம் தேதி பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

உச்சநீதிமன்றம்

அதில், காதர் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் விவகாரத்தில்  பழவலூரில் 13 கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது எனவும், பொன்.மாணிக்கவேல், அசோக் நடராஜன் ஆகியோர் பெயர் குற்றவாளி பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்.மாணிக்கவேல்

இதனால் அதிருப்திக்கு உள்ளான பொன்.மாணிக்கவேல் நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பாக  பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “2017-ம் ஆண்டு நான் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த போது துப்பாக்கி முனையில் சிலைகளைக் கொள்ளையடித்தாக வழக்கு போட்டோம். அந்த வழக்கில் 47 பக்கங்களுக்கு டி.எஸ்.பி அசோக் நடராஜன்  அறிக்கையை  சமர்ப்பித்திருந்தார். அந்த 47 பக்க முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், ஓரிரு நாள்களுக்கு முன்பு எங்கள் இருவரின் பெயரும் குற்றவாளிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகியது. இது முற்றிலும் தவறானது. எங்களின் அறிக்கையை தான் ‘காபி பேஸ்ட்’ செய்திருக்கிறார்கள். தீனதயாளனை  விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். 58 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த அவரை நானே விட்டுவிட்டேன் சொல்வதை எப்படி ஏற்றுகொள்ள முடியும். என்னையே குறிவைப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. பணிக்காலத்தில் நேர்மையாக இருந்தேன். என்னை பொருத்தவரை சாகும் வரை குற்றவாளிகளை துரத்திக்கொண்டிருப்பேன்” என்றார் ஆக்ரோஷமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.