முதலில் இபிஎஸ், அடுத்தது ஓபிஎஸ் – பிரதமரின் திட்டம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை வரும் மோடி அங்கிருந்து மூன்று மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு செல்கிறார். அங்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இதற்கிடையே தமிழகத்தில் மழை பெய்துவருவதால் வானிலை சரியாக இருக்கும்பட்சத்தில் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார். இல்லையென்றால் சாலை மார்க்கமாகவே அவர் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பயணம் செய்வார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருப்பதாகவும் அதற்கு மோடியும் நேரம் ஒதுக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியையும், திண்டுக்கல்லில் இருந்து மதுரை வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர் சந்திக்கலாம் என தெரிகிறது. அதிமுகவில் பிரச்னைகள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில் இருவரையும் பிரதமர் சந்திப்பது அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மேலும், பிரதமரை சந்திக்கும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியின் க்ரீன் சிக்னலை தங்களுக்கு பெறுவதற்கு பெரும் முனைப்பு காட்டுவர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

முன்னதாக, காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்கும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.