முருகனை இலங்கைக்கு அனுப்ப கூடாது: திருமாவளவன் திட்டவட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.

ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்

, “உலகத் தமிழர்கள் மகிழ்ச்சியடையக் கூடிய தீர்ப்பு. காலம் தாழ்ந்து வந்த தீர்ப்பாக இருந்தாலும், இப்போதாவது அவர்களுக்கு விடுதலை கிடைத்ததே என்று ஆறுதலாக உள்ளது. ஆளுநர் தனது கடமையை செய்ய தவறியுள்ளார். இருப்பினும் உச்ச நீதிமன்றம் பொறுப்புடன் செயல்பட்டு ஆளுநரின் தவறை சுட்டிக் காட்டி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஈழத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்டவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது. அதேசமயம் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைக்கவும் கூடாது. அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

முருகன் உள்ளிட்டவர்கள் தங்குவதற்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் அரசு உதவ முன்வரவேண்டும். இதை தமிழக அரசுக்கு எனது கோரிக்கையாக முன்வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.