`11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா' – இந்தியர்களுக்கு அதிக பாதிப்பா?!

சமீப காலமாகப் பெரு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. ‘ஸ்நாப்சாட்’ நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் தனது பணியாளர்களில் 20% பேரை பணி நீக்கம் செய்தது. இதையே ‘ட்விட்டர்’ நிறுவனமும் செய்தது. அதாவது உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ‘ட்விட்டர்’யை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் ‘ட்விட்டர்’ நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களில், 50% பேரை பணியிலிருந்து நீக்கி கடந்த 5-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ‘ஃபேஸ்புக்’கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’வும் பணியாளர்களைக் குறைக்கவிருக்கிறது.

ட்விட்டர்

இதன்படி அந்த நிறுவனம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. இதற்கான விளக்கத்தை ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் அளித்துள்ளார். அதில், ‘கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணைய பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.

ஆனால், மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்த போட்டி மற்றும் விளம்பரங்கள் மூலமான வருவாய் ஆகியவை எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயையே அளித்தன. பணி நீக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய கஷ்டத்தை அளிக்கும் என்பதை அறிவேன். பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க் சக்கர்பெர்க்

இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டதோ அதற்கும், பணி நீக்கத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ‘மெட்டா’ நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இருப்பினும் உலகளாவிய இந்த அறிவிப்பின் தாக்கம் ‘மெட்டா இந்தியாவில்’ பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து ‘மெட்டா இந்தியா’ நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், “கடந்த டிசம்பரில், ‘மெட்டா இந்தியா’ தனது முதல் தனி அலுவலகத்தை குருகிராமில் திறந்தது. இதன் கீழ் சுமார் 400 நபர்கள் பொறியியல், தயாரிப்பு, விற்பனை மற்றும் வெளித் தொடர்பு ஆகிய பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உலகளாவிய அறிவிப்பின் தாக்கம் ‘மெட்டா இந்தியா’வில் மிக முக்கியமானதாக இருக்காது. இதுதொடர்பான கூடுதல் விபரங்கள் அடுத்த வாரத்தில் மட்டுமே கிடைக்கும்” என்றனர்.

மெட்டா

இதுகுறித்து ஆய்வாளர்கள் சிலர், “2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ‘மெட்டா’வின் வருவாய் 4% குறைந்து $27.7 பில்லியனாகவும், உலக நிகர வருமானம் 52% குறைந்து $4.4 பில்லியனாகவும் இருந்தது. இந்த காலகட்டத்தில் நிறுவனம் அதிக செலவு செய்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 19% அதிகரித்திருக்கிறது. மேலும் கொரோனா காலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அப்போது மெட்டா’ உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைத்தது. ஆனால் லாக்டெளன்கள் முடிவடைந்து, மக்கள் மீண்டும் தங்களது வழக்கமான பணிகளுக்குச் சென்றுவிட்டனர். மேலும் ‘மெட்டா’ மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கான டிஜிட்டல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘ஆப்பிள்’ புதிய கொள்கை மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதுபோன்ற காரணங்களினால் ‘மெட்டா’ நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவே, 11,000-க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருப்பதற்குக் காரணம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.