`Delivers When it Matters' – ஓப்பனர்களின் சொதப்பலும் இந்திய அணியின் உலகக்கோப்பைத் தோல்விகளும்!

டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று இந்திய அணி தொடரைவிட்டு வெளியேறியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. ஆயினும், ஓப்பனர்களின் சொதப்பலே மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஓப்பனர்களின் சொதப்பல் எனும் போது இந்த ஒரு உலகக்கோப்பையில் மட்டுமில்லை, கடந்த பத்தாண்டுகளாக இந்திய அணியின் நாக் அவுட் தோல்விகளுக்கும் ஓப்பனர்களின் சொதப்பல்களுக்குமே தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அதைப்பற்றி இங்கே..

இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கின்றனர். இவர்களின் அரையிறுதி வெற்றிக்கு அவர்களின் ஓப்பனர்களின் சிறப்பான ஆட்டமே மிக முக்கிய காரணமாக இருந்தது. நியூசிலாந்து Vs பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் ஓப்பனர்கள் டெவான் கான்வேயும் ஃபின் ஆலனும் பெரிதாக ஆடவே இல்லை. இருவருமே பவர்ப்ளேக்குள்ளாகவே வீழ்ந்திருந்தனர்.

Babar azam | Rizwan

அதேநேரத்தில், பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாமும் ரிஸ்வானும் வெளுத்தெடுத்தார்கள். 100+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்திருந்தனர். ஓப்பனர்களின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் வென்றது.

அதேமாதிரி இங்கிலாந்து Vs இந்தியா போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோஹித்தும் ராகுலும் பெரிதாக ரன்களே சேர்க்கவில்லை. மந்தமாகவே ஆடியிருந்தனர்.

இங்கிலாந்து அணியிலோ ஓப்பனர்களான பட்லரும் ஹேல்ஸூம் ஈவு இரக்கமின்றி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்தெடுத்தனர். விளைவு, இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.

ஜாஸ் பட்லர்

இந்த உலகக்கோப்பையைப் பொறுத்தவரைக்கும் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டிய அணிகளை ஓப்பனிங் கூட்டணியின் செயல்பாடுகளே தீர்மானித்திருக்கிறது.

முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் ஓப்பனர்கள் சொதப்புவது இது முதல் முறையல்ல. கடைசியாக 2013 இல் இந்திய அணி ஐ.சி.சி சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்றிருந்தது. அதன்பிறகு, எந்த பெரிய தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. நம்பர் 1 அணியாக இருப்பார்கள். உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருப்பார்கள். உலகக்கோப்பையிலும் லீக் போட்டிகளில் மெச்சத்தகுந்த பெர்ஃபார்மென்ஸ்களை கொடுப்பார்கள். ஆனால், நாக் அவுட்டில் வந்து சரியாக சொதப்பிவிடுவார்கள்.

பெரும்பாலான சமயங்களில் இந்திய அணியின் நாக் அவுட் சொதப்பல்களை ரிப்பன் வெட்டி தொடங்கி வைப்பவர்களாக ஓப்பனர்களே இருந்திருக்கின்றனர்.

2014 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்து ரன்னர் அப் ஆகியிருந்தது.

Rohit Sharma and Rahane

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 4 ரன்களில் பிரிந்திருந்தது. ரஹானே மூன்றே ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இன்னொரு ஓப்பனரான ரோஹித்தும் 26 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார்.

மோசமான தொடக்கமே இந்திய அணிக்குக் கிடைத்திருந்தது.

இதன்பிறகு 2015 ஓடிஐ உலகக்கோப்பையிலும் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டிருந்தது. இந்திய அணிக்கு 329 ரன்கள் டார்கெட்.

இந்தத் தொடரில் சதமெல்லாம் அடித்து அசத்தியிருந்த ஓப்பனர்களான ரோஹித்தும் தவானும் இந்தப் போட்டியில் அரைசதம் கூட அடிக்கவில்லை.

Rohit Sharma & Dhawan

இருவரும் இணைந்து கூட்டணியாக 76 ரன்களை எடுத்து கொடுத்தனர். ஓரளவு நல்ல தொடக்கமாகவே தெரிந்தாலும் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

இதன்பிறகு, 2017 சாம்பியன்ஸ் ட்ராஃபியிலும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து ரன்னர் அப் ஆகியிருந்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை.

இந்தத் தொடரிலும் ரோஹித்தும் தவானும் லீக் ஆட்டங்களில் நன்றாகவே ஆடியிருந்தார்கள். அரையிறுதியில் கூட ரோஹித் சதமடித்திருந்தார். ஆனால், இறுதிப்போட்டியில் ரோஹித் தவான் இருவருமே இணைந்து ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை.

தவான்

ரோஹித் டக் அவுட். தவான் 21 ரன்களில் அவுட். அதேநேரத்தில், பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் கூட்டணி 128 ரன்களை சேர்த்திருந்தது. அந்த அணியின் ஓப்பனர் ஃபகர் ஜமான் சதமே அடித்திருந்தார். பாகிஸ்தான் சாம்பியன் ஆகியிருந்தது.

2019 ஓடிஐ உலகக்கோப்பையிலும் இந்திய அணி அரையிறுதியில் நியுசிலாந்திடம் தோற்று வெளியேறியிருந்தது. முரட்டு ஃபார்மிலிருந்த ரோஹித்தும் ராகுலும் இந்தப் போட்டியில் சரியாக சொதப்பியிருந்தனர்.

ரோஹித், ராகுல், கோலி என இந்தியாவின் டாப் 3 மூவரும் ஒரே ஒரு ரன்னை மட்டும் எடுத்து அவுட் ஆகியிருந்தனர். ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை ஏமாந்துபோனர்.

கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறியிருக்கவில்லை. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி அடைந்திருந்தனர். அந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் ஷாகீன் ஷா விடம் சிக்கி சின்னாபின்னமாகி தோல்விக்கு வழிவகுத்திருந்தனர்.

அதே 2021 இல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடந்திருந்தது. அதிலும் இந்திய அணி நியுசிலாந்திடம் தோற்றிருந்தது.

Rohit Sharma

அதிலும் இந்திய அணியின் ஓப்பனர்களான ரோஹித்தும் சுப்மன் கில்லும் இரண்டு இன்னிங்ஸிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

முக்கியமான போட்டி ஒன்றில் ஓப்பனர்கள் சரியாக ஆடிக் கொடுக்கும் போது அது அணிக்கே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை கொடுக்கும். மேலும், தொடக்கத்திலேயே எதிரணியை அழுத்தத்திற்குள்ளாக்கும் போது அவர்களின் கையிலிருக்கும் திட்டங்கள் அத்தனையும் குலைந்து போகும். எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற விரட்டுதல் அழுத்தம் அவர்கள் மீது தொற்றிக் கொள்ளும். ஆனால், இந்திய அணியின் ஓப்பனர்கள் கடந்த 10 ஆண்டுகளில் இதை செய்யவே இல்லை. குறிப்பாக, இந்த உலகக்கோப்பையில் அரையிறுதி மட்டுமில்லை. முதல் போட்டியிலிருந்தே சொதப்பல்தான். எல்லா போட்டியிலும் கோலியோ சூர்யகுமாரோ வந்து காப்பாற்றிக் கொண்டே இருக்க முடியாதே!

மேலே குறிப்பிட்ட அத்தனை ஐ.சி.சி நாக் அவுட் போட்டிகளிலும் ரோஹித்தான் இந்திய அணியின் ஓப்பனராக இருந்திருக்கிறார். இருதரப்பு தொடர்களிலும் பெரிய தொடர்களின் லீக் போட்டிகளிலும் மட்டுமே சிறப்பாக ஆடுவது முக்கியமில்லை.

Rohit-Rahul

‘Delivers When it Matters’ என்பார்கள். எப்போது தேவையோ எப்போது அவசியம் ஏற்படுகிறதோ அப்போது சம்பவத்தை நிகழ்த்தியே ஆக வேண்டும். இந்திய அணியின் ஓப்பனர்கள் குறிப்பாக ரோஹித் இந்த விஷயத்தில் தொடர்ந்து சறுக்கல்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த தொடர்களிலாவது இந்நிலை மாற வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.