இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு: கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகளில் சொர்க்கமாக திகழும் இமாச்சலப் பிரதேசத்தில், சட்டமன்றம் 68 உறுப்பினர்களை கொண்டது. அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முன்தினம், தேர்தல் பரப்புரைகள் ஓய்ந்ததை அடுத்து, இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகிறார்கள். சிம்லா, மாண்டி, அமீர்பூர் மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாண்டியில் உள்ள சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இமாச்சல காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், இம்முறை காங்கிரஸ் கட்சியை அரியணை ஏற்ற மாநில மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாக கூறினார். அதிகரித்து வரும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளால், பாரதிய ஜனதா கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக பிரதீபா கூறினார். இமாச்சல் சட்டமன்றத்தில் மொத்தமிருக்கும் 68 இடங்களுக்கு 412 வேட்பாளர்கள் போட்டியிருக்கிறார்கள். அதில் 24 பேர் பெண்கள். இந்தமுறை 52 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதுமாக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பாரதிய ஜனதாவும், காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் அனைத்து தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் போட்டியிருக்கின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்குகளுடன் சேர்ந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.