இமாச்சல பிரதேச தேர்தல்: மாலை 5 மணி வரை 66% வாக்குகள் பதிவு

ஷிம்லா: இமாச்சல பிரேதச சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 66% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது 74% வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று (நவ.12) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக 7 ஆயிரத்து 881 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அது முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ய வாக்குச்சாவடிகளுக்குள் செல்ல மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். 5 மணிக்குள் உள்ளே சென்றவர்கள் 5 மணிக்குப் பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 5 மணி நிலவரப்படி 65.92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு இணை இயக்குநர் மகேஷ் பதானியா அறிவித்தார். இது 74% வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், வாக்குச் சாவடி மையங்கள் அனைத்தும் முழு அளவில் தயார் நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டார். உலகின் மிக உயர்ந்த வாக்குச்சாவடி மையமான தாஷிகாங்-கில் 100% வாக்கு பதிவானதாகவும் மகேஷ் பதானியா தெரிவித்தார்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கண்காணிப்பின் கீழ் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படும். பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.