பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு.. 'சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்காதீங்க' – எஸ்.பி அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 14 வயது சிறுவன், இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்றபோது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கருக்காகுறிச்சியில் உள்ள நல்லாண்டார்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அழகர் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (14). இவர் நெடுவாசலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்து. இதையடுத்து ராமகிருஷ்ணன், இருசக்கர மோட்டார் வாகனத்தில் அவரது வீட்டின் அருகேயுள்ள நல்லாண்டார்கொல்லை மெயின் சாலையில் சென்றுள்ளார்.
image
அப்போது அந்த வழியாகச் சென்ற தனியார் மினி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் ராமகிருஷ்ணன் படுகாயமடைந்த நிலையில் அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடகாடு போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒருபுறம் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
image
இதுகுறித்து அவர் புதிய தலைமுறையிடம் தொலைபேசியில் கூறுகையில்,1’’8 வயதிற்கு குறைவான குழந்தைகள் சட்டப்படி இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது. பெற்றோர்களும் அதற்கு அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து குழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
18 வயது நிரம்பிய பின் ஓட்டுனர் உரிமம் எடுத்த பின்னரே தங்கள் பிள்ளைகளை வாகனம் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்’’ என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.