EWS: “தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா?"- அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு(EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றபடி தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, ம.ம.க, த.வா.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் பங்கேற்றன.

அனைத்துக் கட்சி கூட்டம்

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்த சமூகத்தினருக்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் தடுக்காது என்பதுதான் அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 340-வது பிரிவில் சமுதாய ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்பதுதான் வரையறையாக இருக்கிறது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகளை புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

இதற்குள் இருக்கும் அரசியல் லாபநோக்கங்கள் குறித்து இந்த இடத்தில் நான் பேசவும் விரும்பவில்லை. இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல். 1992-ம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்துள்ளதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு உதவி செய்வதை தடுப்பதாக இதனை கருதத்தேவையில்லை. ஆனால் சமூகநீதிக் கொள்கை அடிப்படையை மடைமாற்றும் திருகு வேலையை, இடஒதுக்கீடு அளவுகளாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ஈராயிரம் ஆண்டுகளாக கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்ட சமூகத்தை தூக்கி விடுவது சமூகநீதியே தவிர, அது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் ஏராளமான தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது.

EWS – பத்து சதவிகித இடஒதுக்கீடு

இன்னும் சொன்னால், முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்காக உருவாக்கப்பட்டதாகவும் இந்த சட்ட திருத்தம் இல்லை என்பதுதான் உண்மை. ஆண்டுவருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழே உள்ளவர்கள் இதன் பயனைப் பெறலாம் என்கிறார்கள். அப்படியானால் மாத வருமானம் ரூ.66,660 பெறுபவர்கள் ஏழைகளா. தினமும் ரூ.2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா. அந்த வகையில் பார்த்தால் இதன் நோக்கம் முன்னேறிய சாதி ஏழைகளின் வறுமைகளை ஒழிப்பதாகவும் இல்லை. கிராமமாக இருந்தால் தினமும் 27 ரூபாயும், நகரமாக இருந்தால் தினமும் 33 ரூபாயும், இதற்கு கீழ் சம்பாதிப்பவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களாக சொல்கிறது ஒன்றிய அரசு. இந்த மக்களுக்கு எத்தகைய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்கலாம், யாரும் தடுக்கவில்லை. ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளாம்.

ஸ்டாலின்

என்னைப் பொறுத்தவரையில் முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது. முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். இந்தவகையில் இந்திய அரசியலமைப்பின் 103-வது திருத்தம் என்பது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது. இந்த சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்டால், காலப்போக்கில் சமூகநீதி தத்துவமே உருக்குலைந்துபோகும். சமுதாய ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்பதை எடுத்துவிடுவார்கள். உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வேறாக இருந்தாலும் முழு அமர்வும் இந்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களை செய்தாக வேண்டும். அந்த கடமை தமிழ்நாட்டுக்கு தான் அதிகம் இருக்கிறது’’. என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.