சிறையில் சந்தித்த போது பிரியங்கா காந்தி கூறியது என்ன? நளினி பேட்டி 

சென்னை: விடுதலைக்குப் பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, தன்னை சிறையில் சந்தித்த பிரியங்கா என்ன கூறினார் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன நளனி சென்னையில் இன்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் மீது அன்பை பொழிந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு தலைவர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

எனக்கும், எனது கணவர் முருகனும் பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. நாங்கள் இந்தியர்கள். எனது கணவர் 32 ஆண்டுகள் இந்தியாவில் இருந்துள்ளார். எனவே கணவர் முருகனுடன் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். ஆனால் தற்போது அவர் திருச்சி முகாமில் உள்ளார். அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

அப்பாவை சந்திக்க எங்களது மகள் ஆவலாக உள்ளார். மீண்டும் இலங்கை செல்லும் எண்ணம் இல்லை. அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க வேண்டும். சிறையில் இருந்தாலும் மனதளவில் கணவர் மற்றும் மகளுடன்தான் இருந்தேன். எப்போதும் அவர்களை தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். எங்களின் விடுதலைக்கு உயிரை கொடுத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

விரைவில் சிறையிலிருந்து வெளியே சென்று விடுவோம் என்று எண்ணிய நேரத்தில் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்தவுடன் வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டும் என்று பல முறை நினைத்துள்ளேன். முதல்வர் சந்திக்க நினைத்தால் நிச்சயம் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்போம்.

பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார். ராஜீவ் காந்தி குடும்பத்தினரை பார்ப்பதற்கு எனக்கு தயக்கமாக உள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்றதாக மட்டுமே என் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டேன். ஆனால் கைதான முதல் நாளிலிருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன். அனைவருக்கும் தூக்கு தண்டனை ரத்தாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது.

பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் நான் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிறையில் இருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை. சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுடன் 6 ஆண்டுகள் உயர்கல்வி படித்து முடித்தேன்.

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம். நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். நான் விடுதலையானதற்கு, சிறை காவலர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.விடுதலைக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி.” இவ்வாறு நளினி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.