புரட்டிப்போட்ட கன மழை; தீவாக மாறிய சீர்காழி கிராமங்கள்: 16,000 பேர் முகாம்களில் தஞ்சம்

சீர்காழி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழகத்தில் 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 122 ஆண்டுகளுக்கு பிறகு 44 செ.மீ மழை பதிவானது. வரலாறு காணாத இந்த மழையால், சீர்காழி மற்றும் திட்டை, தில்லைவிடங்கன், சிவனார் விளாகம், கன்னி கோயில்தெரு, மேல சிவனார் விளாகம், தட்சிணாமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் சீர்காழியில் பல கிராமங்கள் தீவாக மாறி காட்சி அளிக்கின்றன. சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் 65,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. மற்ற இடங்களிலும் சேர்த்து சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா மூழ்கி உள்ளது.

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் இருந்து தொடுவாய் செல்லும் சாலையில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால் மதகில் உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூழையார், தொடுவாய், சின்ன கொட்டாயமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகள் தீவு போல் மாறி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 32 முகாம்களில் 7,156 குடும்பங்களை சேர்ந்த 16,577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணி முதல் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சீர்காழி தவிர மற்ற இடங்களில் மழை இல்லாததால், பயிர்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக ஒரு லட்சம் மீனவர்கள் இன்று 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

பேரிடர் மேலாண் குழு வருகை: சீர்காழியில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அளித்த பேட்டி: மழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க மயிலாடுதுறைக்கு 40 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை  குழு வந்துள்ளது. இதுதவிர மீட்பு பணிக்காக 120 காவலர்களை உள்ளடக்கிய குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 6 துணை கண்காணிப்பாளர்கள், 15 ஆய்வாளர்கள், 300 காவலர்கள், 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் என்றார்.

சிதம்பரம்:1500 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம் நகரை ஒட்டி உள்ள கனகசபா நகர், ஆசிரியர் நகர், சிவபுரி நகர், வெள்ளையன் தோப்பு உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.