பயம், பீதிக்கு வைக்கலாம் முற்றுப்புள்ளி பெரியாறு 142… விரைவில் 152

* அணையின் பலத்துக்கு நிபுணர்கள் கேரண்டி
* நீர்மட்ட உரிமை பெற தமிழக அரசு தீவிரம்

மதுரை : பயத்தையும் பீதியையும் கிளப்புவது எப்போதுமே எளிது. 30 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் விஷமப் பிரசாரம் தொடங்கி விடும். ஆனால், இரு மாநில மக்களுக்காக அணையை முறையாக பராமரித்து, பலப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடியாக நிலைநிறுத்த வேண்டுமென்பதே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.

கேரளாவின் வெள்ள சோகத்தையும், அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பட்டினி சோகத்தையும் தீர்க்கவே, மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிளம்பிய இரு நதிகள் இணையும் பெரியாறு ஏரியின் முகத்துவாரத்தில் அணை கட்டி, பாதாளச் சுரங்கம் அமைத்து நதியை தமிழகம் நோக்கி திருப்பினார்கள். அப்படி முல்லை மற்றும் பெரியாறு நதிகள் சங்கமிக்கும் ஏரியில் உருவான தண்ணீர் தேக்கடி ஏரி வழியாக வைகையின் கிளை நதியான சுருளியாற்றில் இணைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் முதல் நதிகள் இணைப்பு சாத்தியமாக்கப்பட்டது.

இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் கட்டிய இந்த பெரியாறு அணையே, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனத்துக்கான முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதுபோக, தென் தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அது மட்டுமா? இங்கிருந்து கேரளாவுக்கும் அதிகளவு காய்கறிகள் செல்ல உதவுகிறது.

உறுதியான அணை…

அணையின் மேல்பகுதியில் அகலம் குறைவாகவும், அடிப்பகுதியில் மிக அதிக தடிமனும் கொண்டதாக உருவாக்கப்படுபவைதான் புவியீர்ப்பு அணைகள். அப்படி கருங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கலவை கொண்டு பென்னிகுக் கட்டிய புவியீர்ப்பு விசை அணையே பெரியாறு அணை. ‘சிமெண்ட் கான்கிரீட்டால் கட்டப்படவில்லை; சுண்ணாம்பால் கட்டியது என்பதால் இது பலவீனமானது; உடனே உடைக்க வேண்டும்’ என கேரளாவில் விஷம பிரசாரத்தை கிளப்புகின்றனர்.

முதலில் பழங்கால அணை என்பதாலேயே பலவீனமானது என்று கூறுவதை விடவேண்டும். பல நூற்றாண்டுகளாக நிற்கும் கோயில் கோபுரங்கள் முதல் 1,900 வருட பழமையான கல்லணை வரை பயன்படுத்தப்பட்டது இந்த கட்டிட கலவையே. சிமெண்ட கட்டிடங்களுக்கு காலத்தால் பலம் குறையும் என்றால், வயது ஆக ஆக தனது வலுவைக் கூட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை இந்த கட்டிட கலவை அணைகள். அதனால் தான், 1895ம் ஆண்டு திறக்கப்பட்ட அணைக்கு இன்று வரை எந்த ஆபத்தும் இல்லை. உண்மையில் கான்கீரிட் அணைகளை விட பல மடங்கு உறுதியானதாக திகழ்கிறது பெரியாறு அணை. அதன்படியே, இருமாநில மக்களுக்காக பலம் வாய்ந்த பெரியாறு அணையை முறையாக பராமரித்து, பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. இதற்கான தொடர் பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஈடுபட்டுள்ளது.

136 அடியாக குறைப்பு :

பெரியாறு அணை பலவீனம் அடைந்துள்ளது என கேரள அரசு கூறியதால், 1979ம் ஆண்டு தமிழக – கேரள அதிகாரிகள், அமைச்சர்கள் அளவில் திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தான் அணையின் நீர்த்தேக்க அளவு 152ல் இருந்து 136 அடியாக குறைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு பிறகு தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாயம் குறைந்தது. இது அதிமுக அரசு செய்த முதல் தவறு.

அதிமுகவின் அடுத்த தவறு

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியன் அடங்கிய குழு 27.02.2006ல் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தமிழக அரசு உயர்த்திக்கொள்ளலாம். மேலும், பேபி அணையை பலப்படுத்திய பின், நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது. அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற காலம் தாழ்த்தியதால், கேரள அரசு, மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளையும் அவற்றின் பாதுகாப்பை கருதி தன்பொறுப்பிலேயே எடுத்துக்கொள்வதற்கு வகைசெய்யும் விதமாக 17.03.06ல், ‘கேரள அணைகள் பாதுகாப்பு சட்டதிருத்தம்’ சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றியது. இது அதிமுக அரசு செய்த 2வது தவறு.

உரிமையை நிலைநாட்டிய திமுக அரசு…

புவியீர்ப்பு அணைகளின் தாக்குப்பிடிக்கும் சக்திக்கு எடையே பிரதானம் என்பதால் தற்போதுள்ள பெரியாறு அணையின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் 12 ஆயிரம் டன் கான்கிரீட் ஊற்றப்பட்டு அணையின் எடையும், பலமும் அதிகமாக்கப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக்கப்பட்டிருக்கின்றன. கேரள, தமிழக மாநிலங்களை சாராத ஒன்றிய நீர்வளத்துறையின் வல்லுனர் குழு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்தி தெரிவித்ததால் தான் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. மத்தியக் குழு ஒவ்வொரு முறை ஆய்வு செய்தப் பிறகும், பெரியாறு அணை மிகவும் பலமாக இருப்பதாக திட்டவட்டமாக உறுதி செய்கின்றனர். 2021ம் ஆண்டு நவம்பர் 30ல் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது.

அன்று முதல் தொடர்ந்து 12 நாட்கள் 142 அடியாகவும், அடுத்த 18 நாட்கள் 141.50 அடிக்கு குறையாமலும் தண்ணீரை நிலைநிறுத்தி, பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதி செய்ததோடு, அணையில் தமிழக உரிமையையும் நிலைநாட்டியது. கேரளா மற்றும் ஒன்றிய அரசுகள் ஒத்துழைக்கும் பட்சத்தில், நெடுநாள் காத்திருப்பான, 152 அடி நீர் தேக்கும் உரிமையும் தமிழக அரசு சாதித்து முடிக்கும் என நம்பலாம்.

விஷம பிரசாரத்துக்கு நிதி திரட்டும் கொடுமை

பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசல் ஜோய் தலைமையிலான ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பினர் அணை குறித்து 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்றை எடுக்கவும் திட்டமிட்டனர். இந்த ஆவணப்படம் தயாரிக்க 30 லட்சம் ரூபாய் தேவை என்றும், தங்களுக்கு நன்கொடை அனுப்புமாறு, வங்கி கணக்கை தொடங்கி வசூல் வேட்டையை தொடங்கினர். இதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். உலகம் முழுவதும் நன்கொடை கேட்ட ‘டுபாக்கூர்’ அமைப்புக்கு கேரள மக்கள் மட்டும் நன்கொடை வழங்கினர். இந்நிலையில் ‘பெரியாறு – தி பிளீடிங் ரிவர்’ என்ற பெயரில் 17.21 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை இந்த அமைப்பினர் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அணையின் 1,356 ஏக்கர்  நிலம் குறைந்தது எப்படி?

பெரியாறு அணையில் 152 அடியாக இருந்தபோது 8,436 ஏக்கரில் தேங்கிய நீர், அப்ேபாதைய அதிமுக அரசின் தவறான முடிவால் 136 அடியாகக் குறைக்கப்பட்ட போது 7,080 ஏக்கரில் மட்டுமே தேங்கியது. மீதமுள்ள 1,356 ஏக்கரில்தான் குடியிருப்புகள் முளைத்தன. இன்று இந்த 1,356 ஏக்கரில் சொகுசு வீடுகள், ரிசார்ட்கள், அரசு பங்களாக்கள்,  வனத்துறை அலுவலகங்கள் என ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.