'ப்ளீஸ் மன்னிச்சிடுங்க..!' – அமைச்சருக்காக மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தோற்றம் குறித்து மேற்கு வங்க மாநில அமைச்சர் அகில் கிரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில் சீர்திருத்த நிர்வாக அமைச்சராக இருப்பவர் அகில் கிரி, 63.

அண்மையில், பாஜக மூத்தத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் சட்டப்பேரவைத் தொகுதியான நந்திகிராம் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், மாநில அமைச்சருமான அகில் கிரி, பொது மக்களிடையே பேசினார்.

அப்போது, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தோற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே, கொல்கத்தாவில், அமைச்சர் அகில் கிரியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அமைச்சருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தோற்றம் குறித்து அமைச்சர் அகில் கிரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நாங்கள் குடியரசுத் தலைவரை மிகவும் மதிக்கிறோம். அவர் மிகவும் இனிமையான பெண்மணி. அமைச்சர் அகில் கிரி தெரிவித்த கருத்துகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அகில் கிரியின் கருத்துகளை நான் கண்டிக்கிறேன். அழகு என்பது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றியது அல்ல. நீங்கள் உள்ளே இருந்து எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.