மொத்தமாய் அடங்கிப்போன GoBackModi கோஷம்… ஆளுங்கட்சி ஆனதும் அடக்கி வாசிக்கிறதா திமுக?

GoBackModi ட்ரெண்டிங்:
சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, சில மாதங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்யாட் துவக்க விழாவுக்கு வந்து சென்றதை போலவே, கடந்த காலங்களிலும், அதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்று கொண்டுதான் இருந்தார்.

ஆனால் அப்போதெல்லாம் மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதெலலாம் GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தமிழ்நாட்டு அளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்ட்டிங் ஆகும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் விமான நிலையத்தில் இருந்து மோடி விழாவுக்கு செல்லும் வழிநெடுங்கிலும் கறுப்புக் கொடி காட்டுவது, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் Modi Go Back என்று கொட்டை எழுத்துகள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கறுப்பு பலூன்களை பறக்கவிடுவது என மோடியின் வருகைக்கு தங்களின் வலுவான எதிர்ப்பை தவறாமல் பதிவு செய்து வந்தனர்.

அப்போ திமுக எதிர்க்கட்சி: 2018 ஏப்ரல் 12 இல், சென்னையை அடு்த்த திருவிடந்தையில் நடைபெற்ற பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழாவுக்கு மோடி தமிழகம் வருகை தந்தபோது GoBackModi ஹேஷ்டேக் ட்விட்டரில் முதல்முறையாக ட்ரெண்ட்டானது. அதன்பின் 2019 ஜனவரி 27 – மதுரை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டு விழா, பிப்ரவரி 10 இல் திருப்பூர் வருகை, மார்ச் 1 கன்னியாகுமரி விஜயம் ஒவ்வொரு முறையும் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதும் GoBackModi ட்ரெண்டாவதும், வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி்த் தலைவர்கள் மோடியின் காதுபட ‘கோ பேக் மோடி’ கோஷத்தை எழுப்புவதும் வழக்கமான ஒன்றாக இருந்தது.

அவ்வளவாக எடுப்படாத TNWelcomeModi:
இதற்கு எதிர்வினையாக, ட்விட்டரில் ட்ரெண்ட்டாக முயற்சிக்கப்படும் #TNWelcomeModi என்ற ஹேஷ்டேக் பல தருணங்களில் # GoBackModiக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனதே கடந்தகால வரலாறு. அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் மோடிக்கு தீவிர எதிர்ப்பு நிலவி வந்தது. ஆனால், திமுக ஆளுங்கட்சி ஆன பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிரதமர் மோடி அவ்வபோது தமிழ்நாட்டுக்கு வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்.

ஆனால், இப்போதெல்லாம் திமுகவின் கூட்டணி கட்சிகள்கூட GoBackModi கோஷத்தை எழுப்புவதில்லை. இப்படி திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் மோடி விஷயதத்தில் திடீரென சைலன்ட் மோடுக்கு போய்விட்டதற்கான காரணம் என்ன? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடிக்கு எதிராக முன்வைத்த பிரச்னைகள் எல்லாம் ஆளுங்கட்சி ஆனதும் தீர்க்கப்பட்டுவிட்டதா? என்பன போன்ற கேள்விகள் பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

திமுக சைலன்ட் மோட்:
#GoBackModi வரலாறு தெரிந்தவர்கள் இப்படி கேள்வி எழுப்பமாட்டார்கள் என்கிறார் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் திட்டமிட்டு காலம்தாழ்த்தி வந்தது மத்திய பாஜக அரசு. ஒக்கி, தாணே என தமிழகத்தை பெரும்புயல்கள் புரட்டிப் போட்டபோது, அந்த பாதிப்புகளை காண தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வரவில்லை.அத்துடன் புயல் நிவாரணமாக தமிழக அரசு கேட்ட 12000 ரூபாயையும் மத்திய அரச அளிக்கவில்லை. தமிழ்நாட்டின் நலனை புறக்கணிக்கும் விதத்திலான மத்திய பாஜக அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாகதான் அப்போது #GoBackModi கோஷம் எழுப்பப்பட்டது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கூலாக விளக்கி உள்ளார் ராஜீ்வ் காந்தி.

திமுக விளக்கம் சரியா?:
அப்படியானால், காவிரி மேலாண்மை ஆணையம், புயல் நிவாரண நிதி வழங்காதது என்பன போன்றவைதான் #GoBackModi கோஷத்துக்கு காரணமா? ஹிந்தி திணிப்பு, மாநில சுயாட்சிக்கு எதிரான அணுகுமுறை, ஆளுநரை கொண்டு மாநிலத்தில் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி என்பன போன்ற மத்திய பாஜக அரசின் மீது திமுக அரசு தொடர்ந்து வைத்துவரும் வலுமான குற்றச்சாட்டுகளுக்கு #GoBackModi கோஷம் தேவையில்லையா? என்று, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நோக்கி எதிர்கேள்வி வைக்கப்படுகிறது.

என்ன செய்கின்றன கூட்டணிக் கட்சிகள்:
ஒரு மாநிலத்தை ஆட்சிபுரியும் கட்சியாக இருந்து கொண்டு, தமி்ழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமரை #GoBackModi என்று சொல்ல முடியாது என திமுகவின் இந்த மெளனத்துக்கு நியாயம் கற்பிக்கப்பட்டால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் #GoBackModi கோஷத்தை திட்டமிட்டு தவிர்ப்பது ஏன்? அவர்களும் என்ன திமுக ஆட்சியில் பங்கு வகிக்கிறார்களா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு விடை தரும் முக்கிய பொறுப்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு உண்டு. இல்லையென்றால் ஆளுங்கட்சி ஆனதும் திமுக அடக்கி வாசிப்பதாகவே வெகுஜென மக்கள் மத்தியில் இந்த விஷயம் புரிந்து கொள்ளப்படும் என்று திமுகவை எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.