ஆபரேஷன் முடித்து வந்த 4 வயது சிறுவனின் உணவில் கரப்பான்.. விசாரணை வளையத்தில் டெல்லி AIIMS

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது தொடர்பான ட்விட்டர் பதிவால் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
நோயாளியான குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் நேற்று (நவ.,14) விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. ட்விட்டர் பயனர் ஒருவர் புகைப்படங்களுடன் விவரங்களை வெளியிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
நான்கு வயது நோயாளிக்கு பரிமாறப்பட்ட பருப்பு சாப்பாட்டில் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, “தேசிய தலைநகரில் உள்ள மிகவும் மதிப்புமிக்க மருத்துவமனையில் பரிதாபகரமான மற்றும் பயமுறுத்தும் நிலையே உள்ளது. வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 4 வயது குழந்தைக்கு கொடுக்கப்பட்ட முதல் உணவில் “கரப்பான் பூச்சி” இருந்திருக்கிறது. டெல்லி எய்ம்ஸின் செயல் நம்பமுடியாத அளவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது” சாஹில் ஸைதி என்ற பயனர் கடந்த நவம்பர் 13ம் தேதி ட்வீட்டரில் குறிப்பிட்டு உணவில் கரப்பான் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்திருக்கிறார்.

Pathetic and frightening state of affairs at the most prestigious Medical facility in National Capital- Serving „Cockroach Daal“ to a 4 year old as first meal post major stomach surgery @aiims_newdelhi Shocked beyond belief  pic.twitter.com/FU2fu7LuxH
— sahil zaidi (@sahilzaidi3) November 13, 2022

சாஹிலின் ட்விட்டரில் பதிவிட்டதை அடுத்து, “மருத்துவமனை அதிகாரிகள் இந்த சம்பவத்தை தீவிரமாகக் கவனித்து, இது தொடர்பாக விசாரிக்கப்படும்” என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். நோயாளியின் தாயார் இது குறித்து பேசுகையில், “குடல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு என் மகனுக்கு கொடுக்கப்பட இருந்த முதல் உணவு அது. அதில் கரப்பான் பூச்சியை கண்டதும் எய்ம்ஸின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் இது பற்றி கூறினேன். இதையடுத்து உணவுத்துறை பல முறை மன்னிப்பு கேட்டது” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், “என் மகனை குணப்படுத்திய மருத்துவர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் எய்ம்ஸில் உள்ள உணவுத் தரம்தான் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். என்னால் வெளியில் இருந்து உணவு வாங்க முடியும் என்பதால் சமாளித்து விட்டேன். ஆனால் வாங்க முடியாதவர்களின் நிலை என்னவாகும்?” எனவும் அந்த குழந்தையின் அம்மா கேள்வி எழுப்பியிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.