உலகில் அமைதி ஏற்பட கூட்டு முயற்சி காலத்தின் கட்டாயம்: பிரதமர் மோடி| Dinamalar

பாலி: ”உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியை காட்ட வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றும் (நவ.,15)நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் ‘உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தேர்வு. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.

நமது தோள்களில்…

கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப்போர், உலகத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அக்கால தலைவர்கள், அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டனர். தற்போது, நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோவிட் காலத்திற்கு பின் புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நமது தோள்களில் உள்ளது. உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியை காட்ட வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம் ஆகும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும்.

புண்ணிய பூமியில்

அடுத்த ஆண்டு, புத்தரும், மஹாத்மா காந்தியும் பிறந்த புண்ணிய பூமியில் நாம் அனைவரும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கூடும் போது நாம் உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கூறுவோம். இதற்கு அனைத்து தலைவர்களும் ஒப்பு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சர்வதேச அமைப்புகள் தோல்வி

உலகின் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் நெருக்கடி உள்ளது. அனைத்து நாடுகளிலும் ஏழை மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். தினசரி வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை நெருக்கடியை சமாளிக்க அவர்களிடம் நிதி வசதி இல்லை.
அதனை அவர்களால் திரட்டவும் முடியவில்லை. இந்த பிரச்னைகளில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகள் தோல்வியடைந்து விட்டன என்பதை நாம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்ப சீர்திருத்தங்களை செய்ய நாம் அனைவரும் தவறிவிட்டோம். இன்று உலகம் ஜி20 அமைப்பில் இருந்து அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. மேலும், இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.

நாளைய பிரச்னை

கோவிட் காலத்தில் 130 கோடி மக்களுக்கு உணவு கிடைப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், தேவைப்பட்ட பல நாடுகளுக்கு உணவு தானியங்களையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உணவு பாதுகாப்பு அடிப்படையில், உரத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னை. இந்த உரத்தட்டுப்பாடு, நாளைய உணவுக்கான பிரச்னை. அதற்கு உலக நாடுகளிடம் எந்த தீர்வும் இல்லை. உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கலியை நிலையானதாகவும் உறுதியானதாகவும் பராமரிக்க ஜி20 அமைப்பு நாடுகள் பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

latest tamil news

இந்தியா உறுதி

இந்தியாவில், நிலையான உணவு பாதுகாப்பை உருவாக்க, இயற்கை விவசாயம், திணை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்துகிறோம். தினை பொருட்கள் உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை தீர்க்கும். அடுத்த ஆண்டு நாம் அனைவரும் சர்வதேச தினை ஆண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். சர்வதேச வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் முக்கியம். உலகத்தில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது.
எரிசக்தி விநியோகத்திற்கான கட்டுப்பாடுகளை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். சுத்தமான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. 2030க்குள், இந்தியாவின் மின்சார தேவையில் பாதியளவானது சுத்தமான எரிசக்தியில் இருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜி-20 மாநாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா உலகம் தலைமை ஏற்கும் போது, இந்த பிரச்னைகளுக்கு சர்வதேச அளவில் ஒரு மித்த தீர்வு ஏற்படுத்த செயல்படுவோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.