கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்… யாரும் அரசியலாக்க வேண்டும்- அமைச்சர் மா.சு வலியுறுத்தல்

சென்னையை சேர்ந்த இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் (17) மரணம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உயிரிழந்ததை அடுத்து பல்வேறு விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மிக மிக துயரமான சம்பவம். இதை அரசியலாக யாரும் பார்க்கக் கூடாது. ஒரு கல்லூரி மாணவி.

அவருக்கு ஓராண்டிற்கு முன்னால் கால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் இரண்டு வாரத்திற்கு முன்பாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆர்த்தோஸ்கோபி என்று சொல்லப்படும் சிகிச்சையை பெற்றிருக்கிறார்.

மருத்துவர்கள் கட்டுப் போட்டதில் ரத்த ஓட்டத்தை கொஞ்சம் தடுத்திருக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்பட்டு உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நானும், துறையின் செயலாளரும் நேரில் பார்த்தோம். பிரியா குணமடைந்து வீடு திரும்பிய உடன் பெங்களூருவில் இருந்து பேட்டரி கால் வாங்கி தருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி அரசு வேலை வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது பெற்றோரிடம் கூறினோம்.

இதையடுத்து குழு ஒன்று அமைத்து விசாரணையில் ஈடுபட்டோம். அதில் மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது. உடனே அவர்கள் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். இதற்கு முன்பு அந்த இரண்டு மருத்துவர்களும் செய்த ஆர்த்தோஸ்கோபி சிகிச்சை நல்ல முறையில் தான் இருந்துள்ளது.

எந்தவித சிக்கலும் எழவில்லை. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல மாட்டோம். இதனை யாரும் அரசியலாக பார்க்க கூடாது. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் செயலை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அரசு மருத்துவமனைகளுக்கு தினசரி 6 லட்சம் பேர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

60 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக இருக்கின்றனர். இது மிகப்பெரிய மகத்தான மருத்துவ கட்டமைப்பு. எனவே ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது என்று தான் அரசு செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பணிச்சுமை கிடையாது. பொதுமக்களுக்கு ஏற்ப உரிய விகிதத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் மருத்துவ கட்டமைப்பை யாரும் களங்கப்படுத்த வேண்டாம்.

காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை 1,513 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில நோய்களை சேர்க்க வேண்டுமென்றாலும் சேர்த்து கொள்ளலாம். அதற்கான வசதியும் நம்மிடம் இருக்கிறது. விளையாட்டு மட்டுமின்றி வேறு எந்த வகையில் இருந்தாலும் அதை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.