சொத்தின் பெரும் பங்கை வாழ்நாளிலேயே தொண்டு பணிகளுக்கு அளிக்க ஜெப் பெசோஸ் திட்டம்

வாஷிங்டன்,

போர்ப்ஸ் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் பெரும் பணக்காரர்களின் வரிசையில் ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் கோடி சொத்துகளுடன் 4-வது இடம் பிடித்துள்ளவர் ஜெப் பெசோஸ்.

உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வந்த ஜெப் பெசோஸ் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் அதில் இருந்து விலகினார். எனினும், தனது சொத்துகளின் பெரும் பகுதியை தொண்டு சார்ந்த பணிகளுக்கு செலவிட்டு வருகிறார்.

அவரது மனிதநேயம் சார்ந்த செயல்களில் ஒன்றாக, 2020-ம் ஆண்டு தன்னுடைய பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பு பற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, இயற்கை உலகை போற்றி பாதுகாக்கும் வகையில், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.81 ஆயிரத்து 370 கோடி நிதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தனது வாழ்நாளிலேயே சொத்தின் பெரும் பங்கை தொண்டு பணிகளுக்கு அளிக்க திட்டமிட்டு உள்ளார். இதுபற்றி சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்து உள்ளார்.

அவர் குளோ மெலாசிடம் அளித்த பேட்டியில், தனது நன்கொடையின் பெரும் பங்கு பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் பிரிவினைகளில் சிக்கிய மனிதகுலத்தின் ஒற்றுமைக்கான பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கும் சென்று சேரும் என கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது உண்மையில் கடினம் நிறைந்தது. அதற்கு இந்த நிதியை பயன்படுத்தும் வகையிலான திறன் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.