நெருக்கமான ஒருங்கிணைப்பு: ஜோ பைடனிடம் மோடி நம்பிக்கை!

ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது. இதையொட்டி, ஜி20 தலைமைக்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.

இந்த நிலையில், இந்தியாவின் ஜி-20 தலைவர் பொறுப்பின் போது இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். பாலியில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களான, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா – அமெரிக்கா இடையே உத்திசார் கூட்டு செயல்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பது தொடர்பாக அப்போது இரு நாட்டி தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

குவாட், ஐ2யூ2 போன்ற புதிதாக அமைக்கப்படும் நாடுகளின் குழுக்களில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து அவர்கள் இருவரும் திருப்தி தெரிவித்தனர். மேலும், இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவின் ஜி20 தலைவர் பொறுப்பின் போது இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் அப்போது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.