பிரசாந்த் கிஷோர் சொன்ன அரசியல் மந்திரம்… தேர்தல் அரசியல் சரிப்பட்டு வருமா?

தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் என பல்வேறு மாநில அரசியல்களில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரசாந்த் கிஷோர். தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் ஆட்சிக் கட்டிலையே புரட்டி போட்டிருக்கிறார். இவ்வாறு தேர்தல் நிபுணத்துவம் வாய்ந்த பிரசாந்த் கிஷோர், ஐபேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிகாரில் மையம் கொண்டுள்ளார்.

அங்கு மாற்று அரசியலை முன்னெடுக்கப் போவதாக கூறி ’ஜன் சூரஜ் யாத்ரா’வை தொடங்கியிருக்கிறார். மாநிலத்தின் இடது, வலது, கிழக்கு, மேற்கு என 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதாவது, பலரையும் தேர்தலில் நிறுத்தி வெற்றி வாகை சூட வைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் இவர் தேர்தலில் நிற்பாரா? எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், முதல்வர் என எதும் கனவு கோட்டை வைத்துள்ளாரா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் தான் சமீபத்திய பேட்டி அமைந்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டும்?

அப்படியொரு எண்ணமே தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில், பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் என் மீது அவதூறுகளை தொடர்ந்து வாரி இறைக்கிறார்கள். எனக்கு அரசியல் புரிதலே இல்லை எனக் கூறுகிறார்கள். நிதிஷ் குமாரிடம் போய் கேளுங்கள். இரண்டு ஆண்டுகளாக அவரது வீட்டில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று அவருக்கு தெரியும்.

நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றினால் நான் எனது நடைபயணத்தை முடித்துக் கொள்கிறேன் என அதிரடியாக கூறினார். இதன்மூலம் நேரடி போட்டியில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. பிகாரில் மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்பும் அவர், அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

அப்படியெனில் கட்சி தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது. அந்த நாற்காலியில் அமர்ந்தவாறே ஆட்சிக் கட்டிலில் யார் அமர வேண்டும்? அரசை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று பின்னணி அரசியலை செய்யலாம். இதுதான் அவருடைய அரசியல் மந்திரமாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எனவே பிரசாந்த் கிஷோரின் அடுத்தகட்ட முடிவு என்னவென்பது ’ஜன் சூரஜ் யாத்ரா’வின் இறுதியில் தான் தெரியவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.