புட்பால் வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற வீராங்கனை பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு  அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரியா இன்று காலை உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்களும், விளையாட்டு வீரர்களும் மருத்துவமனையில் குவிந்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம். கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  பிரேத பரிசோதனைக்குப்பின் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மாணவியின் கால்பந்தாட்ட விளையாட்டு நண்பர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் மாணவி பிரியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொளத்தூர் காவல் துணை ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

மகள் பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்! தந்தை ரவி வலியுறுத்தல்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.