யாசகமாக பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

திருச்சி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்(72). இவர் 1980ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் செட்டிலானார். அங்கு துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தனது 3 குழந்தைகளையும் கரை சேர்த்த பாண்டியன் முழுநேர யாசகரானார். பின்னர் மும்பையில் மரக்கன்று நடுவது, யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் யாசகமாக பெற்ற பணத்தை கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தான் யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நான் முழுவதும் வைத்து கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். தவிர பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன். தற்போது முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக வந்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து தான் கொண்டு வந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கலெக்டர் பிரதீப்குமாரிடம் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.