5 தலைமுறை கண்ட தெலுங்கு சினிமாவின் பன்முக கலைஞர் கிருஷ்ணாவின் வாழ்க்கை பயணம்

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணா(79) உடல்நல பிரச்னையால் காலமானார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எம்பி… என பல துறைகளில் தடம் பதித்து சாதனை படைத்த திரைக்கலைஞர் கிருஷ்ணாவின் வாழ்க்கையை பற்றிய தொகுப்பு இதோ…

ஆந்திர சினிமா உலகின் ஆளுமைகளாக அறியப்பட்ட என்டி ராமாராவ், நாகேஸ்வரராவ் இவர்களது வரிசையில் ஆந்திர சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட மற்றுமொரு வெள்ளித்திரை நாயகன் தான் நடிகர் கிருஷ்ணா. ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள புர்ரிபாலம் என்ற ஊரில் கட்டமனேனி ராகவய்யா சௌத்ரி – நாகரத்னம்மா தம்பதியரின் மகனாக 1943ல் மே 31ம் தேதி பிறந்தார்.

சினிமா அறிமுகம்
இவரது இயற்பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ணமூர்த்தி. சினிமாவிற்காக கிருஷ்ணாவாக மாறினார். 1961ம் ஆண்டு வெளிவந்த “குலகோத்ரலு” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடமேற்று நடித்ததன் மூலம் ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் கிருஷ்ணா. தொடர்ந்து “பாடன்டி முந்துகு”, “பருவு ப்ரதிஷ்டா” போன்ற ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் 1965ல் வெளிவந்த “தேனே மனசுலு” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகன் அந்தஸத்தை பெற்றார்.

தொடர்ந்து “கண்ணே மனசுலு”, தெலுங்கு சினிமாவின் முதல் துப்பறியும் திரைப்படம் என அறியப்பட்ட “கூடாச்சாரி 116”, “சாக்ஷி”, “மரப்புரானி கதா”, “அவே கல்லு”, “மஞ்சி குடும்பம்”, “சபாஷ் சத்யம்”, “புட்டிநில்லு மெட்டிநில்லு”, “தேவுடு சேஸின மனசுலு”, “அல்லுரி சீதாராம ராஜு, “ராம் ராபர்ட் ரஹீம்” என நாயகனாக இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இவரை ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது.

ஆண்டுக்கு 10 படம்
இவர் நாயகனாக அறிமுகமான முதல் முப்பது ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு சுமார் 10 படங்கள் என, 1964லிருந்து 1995வரை உள்ள இந்த காலகட்டங்களில் 300 படங்களை கடந்து ஒரு பிஸியான கதாநாயக நடிகராகவும், தெலுங்கு சினிமா ரசிகர்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட
ஒரு உச்ச நட்சத்திரமாகவும் உயர்ந்து காணப்பட்டார்.

மனைவியுடன் மட்டும் 48 படங்கள்
1967 ஆம் ஆண்டு வெளிவந்த “சாக்ஷி” என்ற திரைப்படத்தில் நடிகையும், இவரது மனைவியுமான நடிகை விஜயநிர்மலாவுடன் முதன் முதலாக இணைந்து நடித்திருந்த நடிகர் கிருஷ்ணா, தனது திரைப்பயணத்தில் ஏறக்குறைய 48க்கும் அதிகமான திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. இதற்கு அடுத்தபடியாக நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த பெருமை நடிகை ஜெயப்ரதாவிற்கு உண்டு. இந்த ஜோடி 47 திரைப்படங்கள் வரை நடித்திருக்கிறது.

5 தலைமுறை கண்ட பன்முக கலைஞர்
5 தலைமுறை நடிகராக அறியப்படும் இந்த வெள்ளித்திரை நாயகன் தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் 350க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு, “பத்மாலயா ஸ்டூடியோஸ்” என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார்.

பல தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னட திரைப்படங்களை தயாரித்த இவர், தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நாயகனாக நடிக்க வைத்து, “விஸ்வரூபம்”, “தியாகி” போன்ற படங்களையும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “மாவீரன்” திரைப்படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். நடிப்பு, தயாரிப்பு என்ற இந்த இரண்டு தளங்களைத் தாண்டி, இயக்கத்திலும் தடம் பதித்து தனி முத்திரை பதித்தார் நடிகர் கிருஷ்ணா. ஏறக்குறைய 16 திரைப்படங்கள் வரை இயக்கி தன்னை ஒரு இயக்குநராகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் கிருஷ்ணா.

கிருஷ்ணா பயோகிராபி
இயற்பெயர் : கட்டமனேனி சிவராம கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணா
பெற்றோர் : கட்டமனேனி ராகவய்யா சௌத்ரி – நாகரத்னம்மா
பிறந்த தேதி : 31 – மே – 1943
இறந்த தேதி : 15 – நவம்பர் – 2022
பிறந்த ஊர் : புர்ரிபாலம் – குண்டூர் மாவட்டம் – ஆந்திர மாநிலம்
மனைவிகள் : இந்திரா தேவி – விஜயநிர்மலா
பிள்ளைகள் : மகேஷ்பாபு – ரமேஷ்பாபு (மகன்கள்) – பிரியதர்ஷினி – மஞ்சுளா – பத்மாவதி (மகள்கள்)

விருதுகள்
* பத்மபூஷன் – 2009ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்மபூஷன் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

* நந்தி விருது – 1974ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆந்திர மாநிலத்தின் உயரிய விருதான “நந்தி விருது”, “அல்லூரி சீதாராம ராஜு” படத்திற்காக பெற்றார்.

* தென்னக பிலிம்பேர் விருது – 1997ம் ஆண்டு இவரது கலைச் சேவையை பாராட்டி “பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கவுரவித்தது.

* என்டிஆர் தேசிய விருது – 2003ம் ஆண்டு “என்டிஆர் தேசிய விருது” பெற்றார்.

* ஆந்திர பல்கலைக்கழகம் “கவுரவ டாக்டர் பட்டம்” வழங்கி கவுரவித்துள்ளது.

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் மற்றும் அரசியல் என பன்முகத் தன்மை கொண்ட இந்த அஷ்டாவதானி திரைக்கலைஞரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலை அடைந்து இளைப்பாற இறைவனை வேண்டுவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.