திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாள் கெடு வழங்கப்பட்டு உள்ளது. மழைநீர் கால்வாய் பகுதிகளை பேரூராட்சி தலைவர் ஆய்வு நடத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, 2வது வார்டுக்கு உட்பட்ட தேசுமுகிப்பேட்டை, மேட்டுத் தெருவில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து பலர் சுற்றுச்சுவர் மற்றும் சாய்தள கட்டுமானங்களை கட்டியுள்ளனர். மேலும் சிலர் மழைநீர் கால்வாய்களில் பைப்லைன் அமைத்துள்ளனர். இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளிலும் வீடுகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் சாலை மற்றும் மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள சுற்றுசுவர் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அதற்கான செலவினங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை நேற்று பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ், துணை தலைவர் அருள்மணி, செயல் அலுவலர் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் பழனி, சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக அகற்றும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டு பணிகளை முடுக்கிவிட்டனர்.