மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் வனப்பகுதிகளின் அருகே இருக்கக் கூடிய விளைநிலங்களுக்கு காட்டுமாடு, சிறுத்தை, புலி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம். இதில் பெரியகுளம் அருகே உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைகள் வசித்து வருகின்றன. இவை பெரும்பாலும் விளைநிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ இடையூறாகவும், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது இல்லை.

இதனால், பிறபகுதிகளில் அட்டகாசம் செய்யும் புலி, சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றக் கோரிக்கை இப்பகுதியில் எழவில்லை. வனத்துறையினரும் சிறுத்தைகளை விரட்டவோ, வேறுபகுதிக்கு மாற்றவோ முயற்சி செய்யவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் மட்டும், சிறுத்தை வேலியில் சிக்கியதை காப்பாற்ற முயன்ற வனஅதிகாரியை சிறுத்தை தாக்கியதாக தகவல் வெளியானது. மறுநாள் வேறொரு சிறுத்தை தேனி எம்.பி தோட்டத்தில் உள்ள சோலார் மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதில் உள்ள மர்மம் எப்போது விலகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மீண்டும் மாடியில் சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டுள்ள சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலரான இவரின் வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காயவைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்கு சென்று பார்த்த போது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார். அவர் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கே சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி மொட்டை மாடியில் காய வைத்திருந்தாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். “சிறுத்தை தோலினை சுமார் ஒரு வாரத்திற்கு முன்பிருந்து மொட்டை மாடியில் காயவைக்கப்படிருக்கலாம். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை எங்கே எப்போது யாரால் வேட்டையாடப்பட்டது? எதற்காக சிறுத்தையை வேட்டையாடி தோலை மொட்டை மாடியில் காய வைத்து இருக்கிறார்கள்? என்பது துரைப்பாண்டியனை பிடித்து விசாரித்தால் தான் தெரியும்” என்றனர்.