பண மோசடி வழக்கில் மறுபடி மறுபடி ஆஜராகி வருகிறேன்; ஆனால்….? காவல்துறை விசாரணைமீது நடிகர் சூரி அதிருப்தி…

சென்னை: பண மோசடி வழக்கில் மறுபடி மறுபடி ஆஜராகி வருகிறேன்; விசாரணை மட்டுமே நடைபெறுகிறது என  காவல்துறை விசாரணைமீது நடிகர் சூரி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலைக் கதாநாயகனாக வைத்து, ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தை எடுப்பதாக முடிவுசெய்யப்பட்டு, அதில் நடிக்க நடிகர் சூரியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருந்துள்ளதாக சூரி தரப்பு குற்றம் சாட்டி உள்ளது. அதற்கு பதிலாக  தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலாவும் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் ஒன்றை வாங்கித்தருவதாக தெரிவித்ததாகவும், அதற்காக   சூரி மேலும் பணம் கொடுத்தபோதும், நிலம் ஏதும் வாங்கித்தரப்படவில்லையென்றும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, வெறும் நாற்பது லட்ச ரூபாயை மட்டும் தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை தரவில்லை என்றும் சூரி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டே சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்ற போது, வழக்கு பதிவு செய்ய மறுத்ததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி,  அடையாறு காவல்நிலையத்தில் படத்தயாரிப்பாளர்  அன்புவேல் ராஜன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது 406, 420, 465, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் மோசடி வழக்கு  சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே மூன்று முறை நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று 4 வது முறையாக ஆஜரானார்.  ஆனால், இதுவரை மோசடி செய்த நபர்களான படத்தயாரிப்பாளர்  அன்புவேல் ராஜன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரமேஷ் குடவாலாவிடம் காவல்துறை எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம்  நடிகர் சூரி 3-வது முறையாக விசாரணைக்கு  ஆஜரான போது அவரிடம் 110 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் இன்று  4-வது முறையாக ஆஜரானார். இன்று அவரிடம்  சுமார் 2 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பிறகு வெளியே வந்த சூரியுடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் சூரி,  முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் ஷூட்டிங் போயிட்டு வரியான்னு கேப்பாங்க. ஆனா, இப்பலாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வரீங்களா என குடும்பத்தினர் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்ததுடன்,   முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. இப்போ வந்தேன். இப்போதும் விசாரணை நடந்தது என காவல்துறை மீதான  தனது அதிருப்தியை ஓப்பனாக தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எதிர்தரப்புக்கு சாதகமாக விசாரணை நடைபெறுகிறுதா?  காவல்துறையினர் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்களே என கேள்வி எழுப்பினர்.

ஆனால், அதற்கு பதில் அளிக்க மறுத்த நடிகர்சூரி,  யாருக்கும்  சாதகமும் வேண்டாம். விசாரணை நியாயமாக நடந்தால் போதும் என வேதனையுடன் தெரிவித்தவர்,   காவல்துறை, நீதிமன்றம், கடவுள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை என விரக்தியாக கூறினார்.

இந்த மோசடி புகாரில் தற்போது வரை 4 முறை நடிகர் சூரி சென்னை மத்திய குற்றபிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். ஆனால் நடிகர் சூரி குற்றம் சாட்டிய நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.,யுமான ரமேஷ் குடவாலா ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால், காவல்துறையினர் மீது நடிகர் சூரி அதிருப்தி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.