பாஜக ஆடியோ சர்ச்சை…. திருச்சி சூர்யா, டெய்சியிடம் விசாரணை

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் மீது கை வைத்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலையின் தலைமையின் கீழே இப்படி நடந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என அண்ணாமலை அறிவித்தார். மேலும் டெய்சி மற்றும் திருச்சி சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அருவெறுக்கத்தக்க சம்பவம் குறித்து விசாரிக்க பாஜகவில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பாஜக மாநில துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்ஸி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.

முன்னதாக கட்சியின் கட்டுப்பாடை மீறியதாக கூறி காயத்ரி ரகுராமை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கினார். இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும். பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தமிழக பாஜக பேருந்துபோலதான். பழையவர்களை இறக்கிவிட்டால் தான் புதியவர்கள் ஏற முடியும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.