Mangaluru Blast: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் பொறுப்பேற்பு!

மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில், கடந்த சனிக்கிழமை மாலை, ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கர்நாடக மாநில காவல் துறையினர், ‘இந்த விபத்து சாதாரணது அல்ல என்றும், திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல் என்றும்’ தெரிவித்தனர்.

இதை அடுத்து ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகின. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஷரீக் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மிகப்பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை ஷரீக் திட்டியது தெரிய வந்தது. மேலும், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கும், ஷரீக்கிற்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதை அடுத்து கோவை விரைந்த கர்நாடக மாநில காவல் துறையினர், ஷரீக் தங்கிய இடங்கள் குறித்தும், பயன்படுத்திய சிம் கார்டுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். கோவை சம்பவம் என்ஐஏ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டதை அடுத்து, இந்த சம்பவத்தில், என்ஐஏ அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர்.

மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷரீக்கிற்கு, உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரிடம், வாக்குமூலம் வாங்க முடியாமல், கர்நாடக மாநில காவல் துறையினர் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (Islamic Resistance Council) என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இது தொடர்பாக, இந்த அமைப்பு, ஷரீக் புகைப்படத்துடன் கூடிய கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எழுதிய கடிதம் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த அமைப்பின் பெயர் முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தக் கடிதம் உண்மையானதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.