நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்..!

பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆங்கில செய்தி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், “பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே, பொது சிவில் சட்டம் கொண்டுவர பாஜக உறுதி பூண்டுள்ளது.

ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியம். இந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும். அந்த விவாதம் முடிந்த பிறகு அந்தச் சட்டத்தை கொண்டு வருவோம்.

பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட், இமாசலச்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளன. அந்த குழுக்கள் அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சிவில் சட்டத்தை பாஜக மட்டும் ஆதரிக்கவில்லை. அதை உரிய நேரத்தில் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை கூறியுள்ளது. அதை எல்லோரும் மறந்து விட்டனர். நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்..?. ஒவ்வொரு மதத்தினருக்கும் நாடாளுமன்றமோ, சட்டசபைகளோ நிறைவேற்றிய ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எனது தனிப்பட்ட வெற்றியாக பார்க்கவில்லை. மோடி அமைச்சரவையில் நான் ஒரு அமைச்சர். ஒவ்வொரு வெற்றியும் அரசின் வெற்றி. 370-வது பிரிவு இருப்பதால்தான், இந்தியாவுடன் காஷ்மீர் ஒட்டிக்கொண்டுள்ளது என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், அந்த பிரிவு நீங்கிய பிறகும், காஷ்மீர் இந்தியாவுடன்தான் உள்ளது. காஷ்மீரில் 30 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் அடிமட்டத்தில் ஜனநாயகம் வேரூன்றி உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. மிகக்குறைவான பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. கல்வீச்சு சம்பவம் இல்லை. இவையெல்லாம் அரசின் சாதனைகள்.

சிபிஐ, அமலாக்கத்துறையின் சோதனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. யாருக்காவது குறை இருந்தால், கோர்ட்டை அணுகலாம். திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சலுகைகள் அளிக்கப்படுவது பற்றிய வீடியோ உண்மையானதா என்பதை ஆம் ஆத்மிதான் சொல்ல வேண்டும்.

நான் சிறை சென்றபோது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், சிறைக்கு போன பிறகும் அமைச்சர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி. தொகுதி எண்ணிக்கை மற்றும் ஓட்டு சதவீதத்தில் முந்தைய சாதனைகளை முறியடிப்போம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.