உயிருள்ள வரை காங்கிரஸ்… சென்டிமென்ட்டை பிழிந்த எம்எல்ஏ!

சென்னையி்ல் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் விவகாரத்துக்கு, நெல்லை மாவட்டம் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என மாநில தலைமை குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேற்று ஆஜராகும்படி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் நேரில் ஆஜராகாத காரணத்தால், ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று அதிரடியாக அறிவித்தது இச்சம்பவம் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவே அந்த இடைநீக்க உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ரத்து செய்தது இதையடுத்து நெல்லையில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் இரவோடு இரவாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து வெளியான அறிவி்ப்பு தடை விதித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இன்னாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான சூழலில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி.

நேற்று நடந்த நிகழ்வுகள் மூலம் காங்கிரஸ் கட்சி பலமான இடத்தை நோக்கி நகர்வதாக கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியை கோவிலாக கருதுகிறேன், உயிருள்ள வரை காங்கிரசில் தான் இருப்பேன். கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.கட்சி என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சியில் இனிமேல் தவறு நடக்காது, இதுவரை நடந்ததை விட்டுவிடுவோம்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் மாநில தலைமை, கட்சியின் மேல் இடத்தின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். மாநில தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு, அகில இந்திய தலைமையின் கவனத்துக்கு செல்லவில்லை என்பது பொய் என நிருபணமாகிவிட்டது.

மாநில தலைமைக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. மாவட்ட தலைமைக்கும், எனக்கும் கூட எந்த பிரச்சினையும் கிடையாது. எனது கட்சியை உயிராக நேசிக்கிறேன், தலைவர்களையும் அப்படியே நேசிக்கிறேன், எந்த தலைவரையும் கலங்கத்திற்கு உட்படுத்தமாட்டேன்.

செல்வ பெருந்தகைக்கும் சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிறப்பாக பணியாற்றிய செல்வப் பெருந்தகை மீது ஒருவிதமான பார்வை இருப்பதாக நான் கருதுகிறேன் என்று ரூபி மனோகரன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.