'என் கணவர் செக்ஸ் வெறி பிடித்தவர்' காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி சோனியா காந்தியிடமே புகார்!

மத்திய பிரதேச எம்எல்ஏ உமாங்கு சிங்கார் என்பவரின் மனைவி, அவரின் கணவரின் மீது காவல்துறையில் பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார். இதன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல் நாத்  உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று இக்கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் அந்த பெண், அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

தனது கணவருக்கு பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அவர்களை பிளாக்மெயில் செய்யும் கொடூர பாலியல் பழக்கம் உள்ளதாக, காங்கிரஸ் எம்எல்ஏவின் மனைவி தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”உமாங்கால் நான் பலமுறை அநீதி இழைக்கப்பட்டேன். ஆனால், இந்த முறை அவர் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டார், இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் கட்சித் தலைவராக இருப்பதாலும், பெண்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாலும், உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். எனக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பெண்களை மறைமுகமாக வீடியோ எடுப்பதில் அவருக்கு ஒரு வகை பாலியல் பழக்கம் உள்ளது. அவர் தனது முன்னாள் மனைவியை எப்போதும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதையே என்னிடமும் செய்தார். இப்போது அந்த வீடியோக்களை பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். அவருக்கு பல குணாதிசயங்கள் உள்ளன. அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியாக நடந்துகொள்கிறார். 

அவருக்கு எதிராக பலமுறை புகார் கொடுத்துள்ளேன். ஆனால், உள்ளூர் போலீசார் துணிந்து புகாரை விசாரணைக்கு எடுத்ததில்லை. இது எனது தனிப்பட்ட விஷயம் என்பதால் இந்த தகவல் எதுவும் பொதுவில் வருவதை நான் விரும்பவில்லை, ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இறுதியாக எனது கணவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் காங்கிரஸில் இருப்பதால், என்பதால் இதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்.

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ மத்திய பிரதேசத்தில் தொடங்கியிருக்கும் நேரத்தில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வருகிறது. அங்கு பழங்குடியினர் நிறைந்த மால்வா-நிமர் பகுதி வழியாக நடைபயணம் தொடங்கியது. மேலும், எம்எல்ஏ உமாங் சிங்கார் அதே பகுதியை சேர்ந்தவர்.

இதற்கிடையில், மாநில பாஜகவும் காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளது. சிங்கார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவரை தண்டிக்காமல், அரசியலாக பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். சட்டம் தன் வேலையைச் செய்யும். மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்” என்றார். 

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் வனத்துறை அமைச்சரும், காந்த்வானி (தர்) தொகுதி எம்எல்ஏவுமான சிங்கார் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, குடும்ப வன்முறை, பாலியல் வன்புணர்வு, இயற்கைக்கு மாறான உடலுறவு, குற்றவியல் மிரட்டல் மற்றும் தவறான நடத்தை ஆகியவற்றிற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவரின் தற்போதைய மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இதில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.