தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட 11.09 மில்லியன் டொலர் முற்பணம்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட 11.09 மில்லியன் டொலர் முற்பணம் தொடர்பில் கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்துக்குப் பரிந்துரை

 வெலாட் திட்டத்தின் கீழ் (Wellard Project) 2018 இல் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட 11.09 மில்லியன் டொலர் முற்பணம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கை ஒன்றை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பரிந்துரைத்தார்.

இவ்வாறு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கு முற்பணம் செலுத்தினாலும் விலங்குகள் பெற்றுக்கொள்ளப்பட்டோ அல்லது நிதியை மீளப்பெறுவதற்கோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என இங்கு புலப்பட்டது. அதேபோன்று 2012, 2013 மற்றும் 2015 ஆண்டுகளில் 33.7 மில்லியன் டொலர் செலவுசெய்து அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4495 கறவைப் பசுக்களில் 3991 பசுக்கள் இறந்துள்ளமையும் இங்கு புலப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பான அறிக்கையை கோப் குழுவுக்கு வழங்குமாறு கணக்காய்வாளர் நாயகத்துக்கு கோப் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் 2017 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு கோப் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில்  (23) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த பரிந்துரை வழங்கப்பட்டது.

இதில் தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், கமத்தொழில் அமைச்சின்ஜ் செயலாளர் உட்பட அதிகாரிகள், கணக்காய்வாளர் நாயகம், அரச தொழில்முயற்சிகள் திணைக்களம் மாற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதன்போது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 ஏப்ரல் 07 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தின் அறிக்கைஎன்பனவும் பரிசீலிக்கப்பட்டன. அதற்கமைய பிரதான 5 விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபையின் கூட்டுத் திட்டத்துக்கு அமைய திட்டத்தின் இலக்கை அடைவது தொடர்பில் காணப்படும் சிக்கல்கள், 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டறிக்கைகளைப் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்காமை, கணக்குகளை முன்வைத்தல் மற்றும் கணக்காய்வு கருத்துக்கள் தொடர்பிலான பலவீனங்கள், அதாவது 2019, 2020 மற்றும் 2021 நிதி கூற்றுக்களை கணக்காய்வுக்கு சமர்பிக்காமை, கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ கூட்டங்களை முறையாக நடத்தாமை மற்றும் கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை போதுமான அளவு மீளாய்வு செய்யாமை உள்ளிட்ட 5 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கணக்கு தொடர்பான கேள்விகள், நிதிக்கூற்று அறிக்கைகள் மற்றும் ஆண்டறிக்கைகளை சமர்பிக்காமை, நிரந்தர கணக்காய்வாளர் ஒருவர் இல்லாமை, கணக்காய்வு தொடர்பான பிரச்சினைகள், தொழிநுட்பப் பயன்பாடு, கூட்டுத் திட்டத்தில் காணப்படும் பலவீனங்கள், ஆட்சேர்ப்பு, மேலதிக பணியாளர்களை அகற்றுதல், காணிகளுடன் தொடர்புபட்ட சிக்கல்கள், திரவப்பால் திட்டத்தின் முன்னேற்றம், வெலாட் திட்டம், விலங்கு உணவு உற்பத்தி இயந்திரங்களைப் பயன்படுத்துதல், பண்ணைகளை முகாமைத்துவம் செய்தல், தொடர்ந்தும் சபை நட்டமடைதல், வரையறுக்கப்பட்ட மகாவலி கால்நடை தொழில்முயற்சிகள் நிறுவனம், வரையறுக்கப்பட்ட இலங்கை கோழிப் பண்ணை அபிவிருத்தி (தனியார்)நிறுவனம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கலந்துரையாடி அமைச்சின் செயலாளர், தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு 9 பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய,

  1. ஒரு மாத காலத்துக்குள் சபையின் கூட்டுத் திட்டத்தை இற்றைப்படுத்தி சமர்ப்பித்தல்.
  2. அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள், அடைவதற்கு எதிர்பார்க்கும் இலக்குகள் மற்றும் மூலோபாய திட்டங்களை கோப் குழுவுக்கு சமர்ப்பித்தல்.
  3. திட்டமிடும் வேலைத்திட்டங்கள் மற்றும் அடைவதற்கு எதிர்பார்க்கும் இலக்குகளுக்காக தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டமொன்றை கோப் குழுவுக்கு சமர்ப்பித்தல்.
  4. கொள்வனவு மற்றும் விற்பனைகளுக்கு செயற்படுத்தும் கொள்வனவுத் திட்டத்தை குழுவுக்கு சமர்ப்பித்தல்
  5. காணி உரிமை, பயன்பாடு, முழுமையான பயனைப் பெற்றுக்கொள்ளாமை மற்றும் பெறுமதிகள் தொடர்பான பூரண அறிக்கையொன்றை இரண்டு மாதங்களுக்குள் கோப் குழுவுக்கு சமர்ப்பித்தல்.
  6. மில்கோ நிறுவனத்துடன் மூலோபாய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளக்கூடிய இயலுமை தொடர்பில் 3 வாரங்களில் சாத்தியக் கூற்று அறிக்கை ஒன்றை கோப் குழுவுக்கு சமர்ப்பித்தல்.
  7. தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களில் கோப் குழுவுக்கு சமர்ப்பித்தல்.
  8. தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபையின் பிரதான பதவி மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பித்தல்.
  9. கறவைப் பசுக்களை காப்புறுதி செய்வது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களைக் கண்டறிந்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தொடர்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுத்தல்.

ஆகிய பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 14 ஆம் திகதி சபையை கோப் குழுவுக்கு மீண்டும் அழைப்பதற்கு கோப் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பரிந்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப், கௌரவ நலின் பண்டார, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை, இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுராத ஜயரத்ன கண்காணிப்பு உறுப்பினராகவும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.