விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயலுக்கு பதவி தேர்தல் ஆணையர் நியமனத்தில் அவசரம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘ஒன்றிய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது ஏன்? இந்த நியமனத்தில் என் இவ்வளவு அவசரம்?’ என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் அமைப்பு இருப்பது போல், இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை கடந்த ஒரு வாரமாக, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட போது, தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. நேற்றும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ‘ தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாகக்ல் செய்யப்பட்டுள்ளது,’ என  தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கே.எம்.ஜோசப், ‘உங்களின் ஆவணங்களை பரிசீலனை செய்தோம். தேர்தல் ஆணையர்கள் தொடர்பான வழக்கை கடந்த 18ம் தேதி விசாரிப்பதாக நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், அதே நாளில் தேர்தல் ஆணையராக நியமிக்கும்படி அருண் கோயல் பெயரை பிரதமர் பரிந்துரைக்கிறார். இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம் ஏன்?. உங்கள் ஆவணங்கள்படி பார்த்தால், தேர்தல் ஆணையர் பதவி கடந்த மே 15ம் தேதி முதல் காலியாக உள்ளது. அப்போது முதல் நவம்பர் 18 வரை என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா? ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்? அதற்கான அவசியம் என்ன என்பது புரியவில்லை. ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, தேர்தல் ஆணையர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரையில் இருந்துள்ளது.

இந்த பரிந்துரையை எப்படி மேற்கொண்டீர்கள்? அதில் ஒருவரை எப்படி தேர்வு செய்தீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம். தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பவர், உண்மையில் சிறப்பான நிர்வாக திறமை கொண்டவர்தான். ஆனால், இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பேரில் மிகவும் இளையவரான இவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?,’ என கேட்டார். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதற்கென்று உள்ள தனி இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் அதனை பார்க்கலாம்,’ என தெரிவித்தார்.

அப்போது, மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி கே.எம்.ஜோசப், ‘தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவி காலம் 6 ஆண்டுகள் என சொல்கிறீர்கள். தேர்தல் ஆணையர்களில் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால், விரைவாகவே ஓய்வு பெறக் கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களின் பதவிக்கு ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே?’ என கேட்டார். அதற்கு, ‘பணி மூப்பு, ஓய்வு பெறும் வயது உட்பட பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டுதான் தேர்தல் ஆணையர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படுகிறது,’ என தலைமை வழக்கறிஞர் கூறினார்.

இதை கேட்ட நீதிபதி கே.எம்.ஜோசப், ‘எங்கள் கேள்விக்கு இப்போதும் உரிய பதிலை நீங்கள் கூறவில்லை,’ என கண்டித்தார். மேலும், ‘நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் நபர்கள், 6 ஆண்டுகள் முழுமையாக பதவியில் இருப்பவராக இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நபராக நீங்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையரை விட, பணி மூப்பு அதிகமுள்ள அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது குறிப்பிட்ட இவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை’ என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர், ‘எந்த ஆண்டு முதல் அதிகாரியாக உள்ளார், அவர்களின் பிறந்த தேதி, குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர், அவர்களின் பணிச்சேவை போன்ற  முக்கியமான அம்சங்களை கருத்தில் கொண்டே நியமனம் செய்யப்படுகிறது,’ என விளக்கினார். அதை கேட்டு கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி கே.எம்.ஜோசப், ‘நாங்கள் கடைசியாக உங்களிடம் ஒரே ஒருமுறை கேட்கிறோம் நான்கு பேரின் பெயர்களை எப்படி நீங்கள் பரிந்துரையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள்?’ என மிகவும் கோபமாக கேட்டார். அதற்கு தலைமை வழக்கறிஞர் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையத்தின் 1991ம் சட்டப்பிரிவில் பிரிவு 6ஐ ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் மீறியுள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது,’ என குறிப்பிட்டனர்.

மனுதாரர்கள் சார்பில் பிரசாத் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வாதிடுகையில், ‘தேர்தல் ஆணையர்களுக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்று சட்டத்தில் இருக்கிறது. ஆனால், 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு தேர்ந்தெடுப்பது ஏன்? இப்படி இருந்தால் இந்த தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு, சுதந்திரமான அமைப்பாக இயங்குகிறது என்பதை எப்படி நம்ப முடியும்? இதை சரி செய்வதற்கு, தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படையான நடைமுறைகளின்படி தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். 6 ஆண்டு பதவிக்காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்,’ என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். நான்கு பேரின் பெயர்களை எப்படி நீங்கள் பரிந்துரையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.